கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக முன்பதிவு ஆட்டோ கட்டண வசதி (பிரீ பெய்டு) தொடங்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தில் பாட்டாளி தொழிற் சங்கம், தொழிலாளர் முன்னேற்ற சங்கம், விடுதலை சிறுத்தைகள், ஏஐடிசி ஆகிய தொழிற்சங்கங்களை சேர்ந்த 450 ஆட்டோ உரிமையாளர்கள் இணைந்து உள்ளனர்.
இதற்கான கவுண்டர் பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் ரூ.2 செலுத்தி எந்த இடத்திற்கு செல்ல வேண்டுமோ அதற்கு முன்பதிவு செய்து ரசீது பெற்று கொள்ள வேண்டும். போய்சேர வேண்டிய இடத்தில் சென்று இறங்கியதும் பயண கட்டணத்தை செலுத்திக் கொள்ளலாம்.
இந்த புதிய திட்டத்தை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்து பேசுகையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பிரீ பெய்டு ஆட்டோ வசதி தொடங்கப்பட்டுள்ளதை போல் மீனம்பாக்கம் விமான நிலையத்திலும் தொடங்க விரைவில் அனுமதி கிடைத்து விடும்.
மேலும் மதுரை பேருந்து நிலையம், ரயில் நிலையத்தில் பிரீபெய்டு ஆட்டோ வசதி மே 31ஆம் தேதி தொடங்குகிறது. தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் இந்த வசதியை உருவாக்க முயற்சிக்கப்படும் என்று அமைச்சர் நேரு கூறினார்.