கோபி பகுதியில் சூறாவளி காற்று: ரூ.2 கோடி வாழைகள் நாசம்!

செவ்வாய், 27 மே 2008 (12:41 IST)
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பகுதியில் திடீரென்று வீசிய சூறாவளி காற்றினால் ரூ.2 கோடி மதிப்பிலான வாழைகள் நாசமானது.

ஈரோடு மாவட்டம், விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பகுதியாகும். இப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்தில் மஞ்சள், கரும்பு, நெல், புகையிலை மற்றும் வாழை உள்ளிட்ட விவசாய பயிர்கள் தற்போது பயிரிட்டுள்ளனர்.

இதில் கோபிசெட்டிபாளையம், டி.என்., பாளையம், நம்பியூர், அந்தியூர், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதியில் சுமார் இரண்டு லட்சம் ஏக்கர் பரப்பளவில் தற்போது விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ளனர்.

இந்த வாழைகள் நன்றாக வளர்ந்த தற்போது குலை தள்ளி அறுவடைக்கு தயாராக இருந்து வருகிறது. இந்த பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக வாழை நடவு செய்யப்பட்டுள்ள வயல்வெளிகள் நனைந்து ஈரமாக காணப்பட்டது.

இந்த நிலையில் நேற்று திடீரென இப்பகுதியில் சூறாவளி காற்று வீசியது. இந்த காற்றினால் ஏற்கனவே ஈரமாக உள்ள வாழை வயலில் இருந்த வாழைகள் அடியோடு முறிந்து விழுந்தது. இதனால் அறுவடை தருணத்தில் இருந்த வாழைகாய்கள் வீணாகி சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான வாழைகள் நாசமானது.

இது குறித்து வாழை விவசாயிகள் கூறுகை‌யி‌ல், விவசாயி‌‌யி‌ன் வாழ்க்கை வரவுக்கும், செலவுக்கும் சரியாகிவிடும் நிலையில்தான் இருந்து வருகிறோம். தற்போது அறுவடைக்கு தயாரான வாழையை நம்பி பெண் பிள்ளைகளுக்கு திருமணம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளை நிறைவேற்ற கனவு கண்டிருந்தோம். ஆனால் எங்களுக்கு இயற்கையின் இந்த சீற்றத்தால் ஒரே இரவில் எங்கள் வாழ்க்கை இருண்டுவிட்டது. ஆகவே அரசு வாழைக்கு நஷ்டஈடு கொடுக்க ஆவண செய்யவேண்டும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்