எய்ட்ஸ் விழிப்புணர்வு ரயில் இன்று தமிழகம் வருகை!

செவ்வாய், 27 மே 2008 (13:20 IST)
டெல்லியில் தொடங்கி வைக்கப்பட்ட எய்ட்ஸ் விழிப்புணர்வு ரயில் இன்று தமிழகம் வருகிறது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஜூன் 1, 2 தேதிகளில் நின்று செல்லும்.

இதுகு‌றி‌த்து தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபா‌தி செ‌‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், எய்ட்ஸ் நோய் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக `ரெட் ரிப்பன் எக்ஸ்பிரஸ்' என்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு ரயில் கடந்த ஆண்டு டிசம்பர் 1ஆ‌ம் தேதி டெல்லியில் தொடங்கி வைக்கப்பட்டது.

2008ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆ‌ம் தேதி வரை ஓராண்டு காலம் 180 முக்கிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களில் ஒரு நாள் முதல் 3 நாட்கள் வரை இந்த ரயில் நின்று செல்லும். மொத்தம் 9,000 கி.மீ பயணம் செய்து 50,000 கிராமங்களில் சுமார் 1 கோடி பேரிடம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளும்.

இந்த ரயில் இன்று காலை (27ஆ‌ம் தே‌‌தி) தமிழகத்தில் உள்ள வேலூர்-காட்பாடி ரயில் நிலையத்திற்கு வருகிறது. காட்பாடி ரயில் சந்திப்பில் இன்றும், நாளையும் (மே 27, 28) நிறுத்தப்பட்டிருக்கும். காலை 9 மணி முதல் மாலை 8 மணி வரை இந்த ரயிலை மக்கள் பார்வையிடலாம். காட்பாடியை அடுத்து அரக்கோணம் ரயில் நிலையத்தில் 2 நாட்கள் நிற்கும். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஜூன் 1, 2ஆ‌ம் தேதிகளில் நின்று செல்லும்.

ஜூன் 3ஆ‌ம் தேதி செங்கல்பட்டு, 5ஆ‌ம் தேதி விழுப்புரம், 7ஆ‌ம் தேதி புதுச்சேரி, 9ஆ‌ம் தேதி விருத்தாசலம், 11ஆ‌ம் தேதி திருச்சி, 13ஆ‌ம் தேதி கரூர், 15ஆ‌ம் தேதி திண்டுக்கல், 17ஆ‌ம் தேதி மதுரை, 19ஆ‌ம் தேதி தூத்துக்குடி, 21ஆ‌ம் தேதி திருநெல்வேலி, 23ஆ‌ம் தேதி நாகர்கோவில், 25ஆ‌ம் தேதி கன்னியாகுமரி ஆகிய ரயில் நிலையங்களில் ரெட் ரிப்பன் எக்ஸ்பிரஸ் ரயில் மக்கள் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்படும்.

அதையடுத்து இந்த ரயில் கேரளாவுக்கு சென்றுவிட்டு மீண்டும் தமிழகத்திற்கு வருகிறது. ஜூலை 12ஆ‌ம் தேதி கோவை, 14ஆ‌ம் தேதி ஈரோடு, 15ஆ‌ம் தேதி சேலம், 17ஆ‌ம் தேதி ஜோலார்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களுக்கு வந்து செல்லும். ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் மட்டும் இந்த ரயில் 4 நாட்கள் நிறுத்தி வைக்கப்படும். இந்த ரயிலை காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையிடலாம்.

இந்த ரயில் தமிழகத்தில் மொத்தம் 48 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறது. இந்த நாட்களில் 100 கலைஞர்கள் சுமார் 500 கிராமங்களுக்கு சென்று எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்வார்கள். எய்ட்ஸ் நோயால் அனாதையாகிவிட்ட குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக ரூ.5 கோடியில் அறக்கட்டளை ஒன்றும் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், ரெட் ரிப்பன் எக்ஸ்பிரஸ் ரயில் தமிழ்நாட்டு மக்களிடையே மேலும் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படச் செய்யும் எ‌ன்று தலைமை செயலாளர் எல்.கே.திரிபாதி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்