அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு: ஜெயலலிதா கேள்வி!
திங்கள், 26 மே 2008 (13:06 IST)
அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் மத்திய அரசு நிறுவனங்கள் சேவையில் ஈடுபட்டிருக்கும்போது ஒரு பன்னாட்டு தனியார் நிறுவனத்திடம் இத்திட்டத்தை தமிழக அரசு ஒப்படைக்க வேண்டியதன் நோக்கம் என்ன? என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய நலவாழ்வு காப்பீட்டு திட்டத்தை ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைடு இன்சூரன்ஸ் கம்பெனி என்ற பன்னாட்டுத் தனியார் காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் தி.மு.க. அரசு ஜூன் மாதம் செயல்படுத்த உள்ளது.
தனியார் நிறுவனத்திற்கு தமிழ் நாட்டில் உள்ள 12 மாவட்டங்களில் அலுவலகங்களே இல்லாத நிலையில், அரசு ஊழியர்கள் சிகிச்சை பெறுவதற்கான மருத்துவமனைகளின் பட்டியலை பன்னாட்டு தனியார் காப்பீட்டு நிறுவனம் இதுவரை வெளியிடாத நிலையில், அவசர அவசரமாக அந்த நிறுவனத்திற்கு ரூ.75 கோடிக்கான பிரிமியம் தொகையை முன்கூட்டியே கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், நி இந்தியா அஷ்ரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ், லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா போன்ற மத்திய அரசு நிறுவனங்கள் இது போன்ற சேவையில் ஈடுபட்டிருக்கும் போது, ஒரு பன்னாட்டுத் தனியார் நிறுவனத்திடம் இந்தத் திட்டத்தை ஒப்படைக்க வேண்டியதன் நோக்கம் என்ன?
புகார்கள் தொடர்பான குழுக்களில் தனியார் பன்னாட்டுக் காப்பீட்டு நிறுவனத்தின் சார்பாக பிரதிநிதிகள் இடம்பெற அரசாணையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதே சமயத்தில், அரசு ஊழியர்கள் சார்பாக பிரதிநிதிகள் இடம் பெற வழிவகை செய்யப்படவில்லை.
அரசு ஊழியர்கள் நலன் கருதி, இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பு, ஊழியர் சங்கங்களை கலந்து ஆலோசித்து அதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து, அவர்கள் திருப்தி அடையும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.