சேதுசமுத்திர திட்டத்தை நிறுத்தியிருப்பது சரியா? நல்லகண்ணு!
திங்கள், 26 மே 2008 (09:56 IST)
நம்பிக்கையை மட்டுமே வைத்து சேதுசமுத்திர திட்டத்தை நிறுத்தியிருப்பது சரியா? என்று ஆர்.நல்லகண்ணு கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் நேற்று நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் இந்திய கம்னிஸ்டு கட்சி தேசிய கட்டுப்பாட்டு குழு தலைவர் ஆர்.நல்லகண்ணு கலந்து கொண்டு பேசுகையில், 1860-ல் சேதுசமுத்திர திட்டம் போடப்பட்டது. அப்போதுதான் சூயஸ், பனமா கால்வாயை வெட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
தற்போது சேதுசமுத்திர திட்டம் வெட்டும் முயற்சி எடுக்கப்பட்டு அதற்காக பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த திட்டம் இன்று நிறுத்தப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. அகழ்வாராய்ச்சியை நிரூபிக்க சொல்லியிருக்கிறார்கள். நம்பிக்கை ஒன்றையே வைத்து சேதுசமுத்திர திட்டத்தை நிறுத்தியிருப்பது சரியா?.
பாரதியார் புராணங்களை கட்டுக்கதைகள் என்று கூறியிருக்கிறார். பாரதி போன்ற ஆன்மீகவாதியை புறந்தள்ளிவிட்டு முட்டாள்தனமான நம்பிக்கையை வைத்து நல்ல திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவது, நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது என்று நல்லகண்ணு பேசினார்.