பொறியியல் மாணவர்கள் உருவாக்கிய போக்குவரத்து கருவிகள்!

சனி, 24 மே 2008 (17:00 IST)
வேலம்மாள் பொறியியல் கல்லூரியின் 4 மாணவர்கள் போக்குவரத்தை முறைபடுத்த தானியங்கி தொழில் நுட்பங்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

"ஸ்மார்ட் டிராஃபிக்" என்று அழைக்கப்படும் இந்தக் கருவிகள் பண்பலை அடையாள தொழில் நுட்ப முறையில் செயல்படும். இதில் 5 பகுதிகள் உள்ளன:

1. ஆப்டிமம் டிராஃபிக்
2. எமர்ஜென்சி வாகன வழிகாட்டிக் கருவி
3. எச்சரிக்கைப் பகுதிக் கருவி
4. தானியங்கி சாலை வரி வசூல் கருவி
5. திருட்டு தடுப்புக் கருவி

ஆப்டிமம் டிராஃபிக் என்பது ஒரு மின்னணு சாதனம். நெரிசலான போக்குவரத்துப் பகுதிகளில் இந்த கருவியை பொருத்தி விடலாம். மனித உதவியின்றி இந்தக் கருவி போக்குவரத்தை கட்டுப்படுத்தி ஒழுங்கமைக்கும். மேலும் போக்குவரத்து சிக்னல்களை அந்தப் பகுதிகளில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கைக்கேற்ப போக்குவரத்தை கட்டுப்படுத்தும்.

எமர்ஜென்சி வாகன வழிகாட்டிக் கருவி: மருத்துவமனை அவசர நிலை வாகனங்கள் மற்றும் முக்கியஸ்தர்களின் வாகனங்கள் அந்தப் பாதையில் வரும்போது சிக்னலை அதற்கு ஏற்ப இயக்க வழி வகை செய்யும்.

எச்சரிக்கைப் பகுதி கருவி: இந்தக் கருவியை எந்த ஒரு வாகனத்திலும் பொருத்தலாம். அதாவது பள்ளிகள் மற்றும் மருத்துவமனைப் பகுதிகளில் வரும்போது வாகன வேகத்தையும், ஹார்ன் ஒலியையையும் இது தானாகவே குறைத்து விடும்.

தானியங்கி சாலை வரி வசூல்: இந்த கருவி வரி வசூல் அலுவலகத்திற்கு அடையாளப்படுத்திக் காட்டும். மேலும் வாகன உரிமையாளர் வங்கிக் கணக்கிலிருந்து தானாகவே வரி வசூல் தொகையை எடுத்து கொள்ளும்.

திருட்டுத் தடுப்பு: திருட்டுத் தடுப்புக் கருவியை எந்த ஒரு வாகனத்திலும் பொருத்திக் கொள்ளலாம். இது ஓட்டுனரின் அடையாளத்தை கண்டுபிடிக்கும் தன்மை கொண்டது. அந்த நபர் அல்லாது வேறு ஒருவர் ஒரு காரை ஸ்டார்ட் செய்தால் இந்தக் கருவி எஞ்சினை உடனே நிறுத்தி விடும்.

இந்தக் கருவிகளின் செயல்பாட்டை வேலம்மாள் பொறியியல் கல்லூரி பொறியியியல் மாணவர்களான எஸ்.அர்ச்சனா, ஜி.பிரசாத், ஜி.ராஜ ராஜேஷ்வரி, எஸ்.சரவணன் ஆகியோர் செய்தியாளர்களிடையே விளக்கிக் காட்டினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்