''தங்ககாசு திட்டத்தில் பணம் மோசடி செய்த ஹாங்காங் கோல்டு வெஸ்ட் நிறுவனத்தின் பொது மேலாளர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்'' என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில்குமரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மலேசியாவில் இருக்கும் ஹாங்காங் கோல்டு குவெஸ்ட் நிறுவனத்தின் தலைவர் விஜய ஈஸ்வரனை கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த நிறுவனத்தின் மீது 17,348 புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகார்கள் மூலம் ரூ.45 கோடி மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.ஷேர் மார்க்கெட்டில் ரூ. 150 கோடி ரூபாய் முதலீடு செய் திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை முடக்கம் செய்ய இந்திய பங்கு சந்தை முதலீட்டு கழகத்தை நாடியுள்ளோம்.
நீதிமன்றத்தின் மூலம் பணம் கட்டி ஏமாந்தவர்களுக்கு பணத்தை திரும்பி பெற்று தர காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள். ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹாங்காங் கோல்டு வெஸ்ட் நிறுவனத்தின் பொது மேலாளர் புஷ்பம் அப்பளம் நாயுடு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறை ஆணையர் நாஞ்சில்குமரன் கூறினார்.
மோசடியில் ஏமாந்தவர்கள் கொடுத்த புகாரின் பேரில் அந்த நிறுவனத்தின் பொது மேலாளர் புஷ்பம் அப்பளம் நாயுடு உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.