ஜூலை 11 ஆம் தேதி பொறியியல் கலந்தாய்வு: பொன்முடி!
சனி, 24 மே 2008 (15:01 IST)
ஜூலை 11ஆம் தேதிகளில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்குகிறது என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
சென்னையில் இன்று அமைச்சர்கள் பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பொறியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த 10ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் நலன் கருதி விண்ணப்பங்களை தாக்கல் செய்வற்கான தேதி மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை தாக்கல் செய்தவர்களுக்கான ரேண்டம் எண் ஜூன் 20ஆம் தேதி அளிக்கப்படும். தர வரிசை பட்டியல் ஜூன் 25ஆம் தேதி வெளியிடப்படும்.
பொறியியல் பட்டப்படிப்பில் சேரும் விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 3ஆம் தேதி நடைபெறும். தொழில் கல்வி பாடத்திட்ட மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 4ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நடைபெறும்.
அயல் மாநில மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 9ஆம் தேதியும், உடல் ஊனமுற்றோருக்கான கலந்தாய்வு ஜூலை 10ஆம் தேதியும் நடைபெறும். பொதுப்பிரிவு பாடத்திற்கான கலந்தாய்வு ஜூலை 11ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நடைபெறும்.
பொறியியல் கலந்தாய்வு சென்ற ஆண்டை போல அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும். இதற்கு கடந்த ஆண்டை போல மாணவருக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் பேருந்து கட்டண சலுகை வழங்கப்படும்.
மருத்துவ கல்லூரிகளுக்கான விண்ணப்ப படிவம் ஜூன் 3ஆம் தேதி முதல் வழங்கப்படும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்கக்கூடிய கடைசி நாள் ஜூன் 17ஆம் தேதி ஆகும். ரேண்டம் எண் ஜூன் 18ஆம் தேதி வெளியிடப்படும். தரவரிசை பட்டியல் 28ஆம் தேதி வெளியிடப்படும்.
மருத்துவ பட்டப்படிப்புக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 4ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடைபெறும். மருத்துவ படிப்பில் சேர்வதற்கான கடைசி நாள் ஜூலை 21ஆம் தேதி ஆகும். ஆகஸ்டு 4ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும்.
2-வது கட்ட மருத்துவ கலந்தாய்வு ஆகஸ்டு 28ஆம் தேதி நடைபெறும். ஆகஸ்டு 30ஆம் தேதி தேர்வு பெற்ற மாணவர்கள் கல்லூரியில் சேர வேண்டும். செப்டம்பர் 30ஆம் தேதியுடன் அனைத்து மருத்துவ சேர்க்கையும் முடிவடையும்.
இதற்கு கடந்த ஆண்டை போல மருத்துவ கலந்தாய்வுக்கு வரும் மாணவருக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் பேருந்து கட்டண சலுகை வழங்கப்படும் என்று அமைச்சர்கள் கூறினர்.