''கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட தரமான ரேஷன் அரிசியின் அளவு 1,09,984 குவிண்டால் ஆகும். இதன் மதிப்பு சுமார் ரூ.11 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது'' என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் தி.மு.க அரசு பொறுப்பேற்றது முதல் ரேஷன் அரிசி அயல் மாநிலங்களுக்கு கடத்தப்படுவதும், தனியாருக்கு விற்பனை செய்யப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.
நியாய விலை கடைகளின் மூலம் அரிசி, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, பாமாயில், கோதுமை மாவு போன்ற அத்தியாவசிய பொருட்கள் உண்மையில் ஏழை, எளிய மக்களை சென்றடைவதில்லை. பெரும்பாலான நியாய விலை கடைகளில் ஒரு குடும்ப அட்டைக்கு மாதம் 10 கிலோ அரிசி மட்டுமே வழங்கப்படுவதாக தமிழக மக்கள் புகார் அளித்த வண்ணம் உள்ளனர். இதர அத்தியாவசிய பொருட்களை பொருத்தவரையில் ஒரு சில கடைகளில் சில மாதங்கள் மட்டுமே வழங்கப்படுவதாகவும் புகார்கள் வருகின்றன.
தமிழக அரசின் 2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி திட்டத்தின் மூலம் பயனடைபவர்கள் தி.மு.க.வினர் மட்டுமே. நியாய விலை கடைகளில் வழங்கப்படும் அரிசியின் பெரும்பாலான பகுதி அயல் மாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட தரமான ரேஷன் அரிசியின் அளவு 1 லட்சத்து 9 ஆயிரத்து 984 குவிண்டால் ஆகும். இதன் மதிப்பு சுமார் ரூ.11 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.
இனியாவது, நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் ஏழை, எளிய மக்களுக்கான அரிசியை கடத்தி கள்ளச்சந்தையில் விற்கும் கயவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும், அனைத்து ஏழை, எளிய மக்களுக்கும் மாதமாதம் 20 கிலோ தரமான அரிசி வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் தி.மு.க அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.