மது‌வில‌க்கு கொ‌ள்கை‌யி‌ல் அரசு த‌ள்ளாட‌க் கூடாது: ராமதாஸ்!

சனி, 24 மே 2008 (10:43 IST)
''வருமானம் வருகிறது என்பதற்காக மதுவிலக்கு கொள்கையில் அரசு தடுமாறவும் கூடாது, தள்ளாடவும் கூடாது'' என்று பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதாஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொடர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுக்கடைகளை மூடுங்கள்; மதுக் கொடுமையில் இருந்து காப்பாற்றுங்கள் என்று பா.ம.க. தொடர்ந்து இயக்கம் நடத்தி வருகிறது. மதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் பெருகிவிடும்; கள்ள சாராய சாவுகள் நிகழும் என்றெல்லாம் அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டு வந்திருக்கிறது. மதுக்கடைகளை திறந்தும், கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியவில்லை, கள்ளசாராய சாவுகளையும் தடுக்க முடியவில்லை என்பதை ஓசூர் கள்ளசாராய சாவுகள் எடுத்து காட்டுகின்றன.

கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர்களுக்கும், காவல்துறையில் பணியாற்றும் ஒரு சிலருக்கும் இடையே மறைமுக கூட்டணி இருந்து வந்துள்ளது. ஓசூரில் மட்டுமல்ல, தமிழகமெங்கும் இந்த மறைமுக கூட்டணியால் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது என்பது உண்மை.

கள்ளச்சாராயத்தை ஒழிக்கவும் கள்ளசாராய சாவுகளை தடுக்கவும், சில்லறை மதுக்கடைகளை அரசே திறந்து நடத்தி வருவதாக கொள்கை பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது. ஆயினும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியவில்லை. இதில் இருந்து அரசின் மதுவிலக்கு கொள்கையில் மாற்றம் தேவை என்பதை உணரமுடிகிறது. கள்ளசாராயம் மட்டுமின்றி அனைத்து வகை மதுவும் ஒழிக்கப்பட வேண்டும். வருமானம் வருகிறது என்பதற்காக மதுவிலக்கு கொள்கையில் அரசு தடுமாறவும் கூடாது, தள்ளாடவும் கூடாது.

கள்ளசாராய சாவில் சரித்திரம் படைத்திருக்கும் ஓசூர் கள்ளசாராய நிகழ்வுகள் குறித்தும், அவற்றின் பின்னணி குறித்தும் விசாரித்து அறிய உயர்மட்ட அளவிலான நீதிவிசாரணை நடத்த அரசு உத்தரவிட வேண்டும். எதையும் குறை கூற வேண்டும் என்பதற்காக, இதையும் கூறுகிறார் என்று குறை சொல்லி அரசு தனக்குள்ள பொறுப்பை தட்டிக் கழிக்க கூடாது.

ஓசூர் கள்ளச்சாராய நிகழ்வில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு அரசு தகுந்த நஷ்ட ஈடு வழங்க வேண்டும். பலியானவர்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் குறைந்தளவு ரூ.2 லட்சம் அளவுக்காவது நஷ்ட ஈடு வழங்க அரசு முன்வர வேண்டும் எ‌ன்று ராமதா‌ஸ் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்