ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு கருணாநிதி உத்தரவு!
சனி, 24 மே 2008 (09:48 IST)
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை உரிய காலத்தில் முடிக்கவும், சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் இரு திட்டங்களையும் விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் முதலமைச்சர் கருணாநிதி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முதலமைச்சர் கருணாநிதி துறை வாரியான ஆய்வுப் பணிகளில் 2-ம் நாளான நேற்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆய்வு செய்தார்.
ரூ.616 கோடி மதிப்பீட்டிலான ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தை ஏப்ரல் 2009-க்குள் நிறைவேற்றி முடிக்குமாறும், ரூ.1334 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுவரும் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த் திட்டத்தையும், தஞ்சை, நாகை மாவட்டங்களில் அமைந்துள்ள குடியிருப்புகளுக்கு கொள்ளிடம் ஆற்றை நீராதாரமாக கொண்டு செயல்படுத்தவுள்ள இரு கூட்டுக் குடிநீர் திட்டங்களையும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட கால நிரல்படி நிறைவேற்றிட முதலமைச்சர் கருணாநிதி அறிவுரைகள் வழங்கினார்.
மீஞ்சூரில் அமைக்கப்பட்டுவரும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை 2009-ம் ஆண்டு ஜனவரிக்குள் முடித்திடவும், கிழக்கு கடற்கரை சாலை நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை தொடங்கிட விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவுரைகள் வழங்கினார் என்று அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.