கோடையில் (தங்களின்) வெப்பத்தை தணிப்பதற்காக குடிப் பிரியர்கள் பீரை போட்டி போட்டு வாங்கி குடிப்பதால் தமிழகத்தில் பீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகரித்துவரும் தேவையை சமாளிப்பதற்காக அயல் மாநிலங்களில் இருந்து அதிகமாக பீர் வாங்கப்படுகிறது.
கோடை காலத்தில் இளநீர், குளிர்பானங்கள், தர்பூசணி, ஜுஸ் வகைகள் அதிகமாக விற்பனையாகும். இவை எல்லாவற்றையும் விட மதுக்கடைகளில் `பீர்'களுக்கு கடும் கிராக்கி இருக்கும். பிராந்தி, விஸ்கி, ரம் போன்ற மதுபானங்கள் குடிப்பவர்கள் கூட கோடை காலத்தில் பீர் அதிகமாக குடிப்பது வழக்கம். இதனால் பீர் விற்பனை அதிகரித்துள்ளது.
டாஸ்மாக் கடைகளில் பீர் வேகமாக விற்றுத் தீர்ந்துவிடுகிறது. பாரில் அரை மணி நேரம் முதல் 1 மணி நேரம் வரை காத்திருந்து பீர் குடிக்கிறார்கள்.
இப்படி குடி மன்னர்கள் போட்டிப்போட்டுக்கு கொண்டு பீர் வாங்கிக் குடித்து வருவதால் தமிழகத்தில் பீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க அயல் மாநிலங்களான புதுச்சேரி, கேரளா, ஆந்திராவில் இருந்து தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் கூடுதலாக பீர் தருவிக்கிறது.
டாஸ்மாக் கடைகளில் கிங் பிஷர், பிளாக் அண்ட் நைட் சூப்பர் ஸ்ட்ராங்க், புல்லட் சூப்பர் ஸ்ட்ராங்க், மார்க்கபோலோ, கல்யாணி போன்ற பீர் வகைகள் அதிகமாக விற்பனையாகின்றன. மொத்தம் 15 வகையான பீர்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதில் ராயல் சேலன்ஜ், கேனன் 10,000 சூப்பர் ஸ்ட்ராங்க், யு.பி.ஐஸ். பிரிமீயம் அயல் மாநிலங்களில் இருந்து பீர்கள் வாங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டின் பீர் தேவை சராசரியாக ஒரு மாதத்திற்கு 20 லட்சம் பெட்டிகள். இந்த மாதத்தில் 26 லட்சம் பீர் பெட்டிகள் வாங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது டாஸ்மாக் நிறுவனம். கோடை மாதமான ஏப்ரலில் இருந்து தொடங்கிய பீர் விற்பனை தற்போது உச்சத்தை அடைந்துள்ளது.
கடந்த நிதியாண்டில் ரூ.10,000 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது. விற்பனையில் 20 விழுக்காடு பீர் மூலம் கிடைத்துள்ளது. நடப்பு நிதியாண்டில் அதாவது மே மத்தி வரை மதுபானம் ரூ.2,800 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது.