சத்தி வனப்பகுதியில் பெண் யானை காப்பாற்ற வனத்துறை தீவிரம்!
செவ்வாய், 20 மே 2008 (17:29 IST)
ஈரோடு அருகே வனப்பகுதியில் நோய்தாக்கி ஆண் யானை இறந்தது. உயிருக்கு போராடும் பெண் யானையை காப்பாற்ற வனத்துறையினர் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.
ஈரோடு அடுத்துள்ளது சத்தியமங்கலம் வனப்பகுதி. இந்த வனப்பகுதியில் யானைகள் கூட்டம், கூட்டமாக வசித்து வருகிறது. தமிழகத்திலேயே யானைகள் அதிகமாக வாழும் வனப்பகுதிகளில் சத்தியமங்கலம் வனப்பகுதியும் ஒன்றாகும்.
சத்தியமங்கலம் வனக்கோட்டம் ஆசனூர் வனப்பகுதிக்குட்பட்ட காடட்டி வனத்தில் ஐந்து வயது மதிக்கதக்க ஆண் யானை ஒன்று நோய்வாய்பட்டு இறந்தது. தகவல் அறிந்ததும் சத்தியமங்கலம் மாவட்ட வனஅதிகாரி எஸ்.இராமசுப்பிரமணியம், வனத்துறை மருத்துவர் மனோகரன், ஆசனூர் வனவர் சிவமல்லு உள்ளிட்டோர் நிகழ்விடத்திற்கு சென்றனர்.
அங்கு பத்து வயது மதிக்கதக்க பெண் யானை ஒன்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. அந்த யானை காப்பாற்ற வனத்துறையினர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தபோதிலும் யானையில் உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டு வருகிறது.