ஸ்ரீபெரும்புதூரில் ரூ.250 கோடியில் மருத்துவத் தொழில்நுட்பப் பூங்கா!
செவ்வாய், 20 மே 2008 (10:29 IST)
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழிற்பேட்டையில் ரூ.250 கோடியில் மருத்துவத் தொழில்நுட்பப் பூங்கா டிவிட்ரான் நிறுவனம் அமைக்கிறது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று நடைபெற்றது.
இது குறித்து அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஜி.எஸ்.கே.வேலு கூறுகையில், ஜப்பானைச் சேர்ந்த அலோகா நிறுவனமும் டிவிட்ரான் நிறுவனமும் இணைந்து இந்த மருத்துவ தொழில்நுட்ப பூங்காவை அமைக்கின்றன. 23 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த பூங்கா அமைக்கப்படுகிறது.
மேலும் 2 ஏக்கர் நிலத்தை வாங்கி இந்த பூங்காவை சிறப்பு பொருளாதார மண்டலமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இங்கு நியாயமான விலையில் தரமான மருத்துவத் தொழில்நுட்பக் கருவிகள் உற்பத்தி செய்யப்படும். இங்கு உற்பத்தி செய்யப்படும் மருத்துவக் கருவிகள் தெற்காசிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.
இந்தியாவில் இந்த கருவிகள் 30 முதல் 40 விழுக்காடு தள்ளுபடி விலையில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கருவிகள் தற்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த நிறுவனம் 3 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கவும் திட்டமிட்டுள்ளது. அடுத்த ஜனவரியில் உற்பத்தி தொடங்கும் என்று வேலு கூறினார்.