கடந்த 9ஆம் தேதி வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளின் மதிப்பெண் சான்றிதழ் நாளை பிற்பகல் முதல் வழங்கப்படவுள்ளது என்று அரசுத் தேர்வுகள் துறை இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பள்ளி மாணவர்களுக்கு அவர்களது பள்ளிகள் மூலமாகவும், தனித் தேர்வர்களுக்கு அவர்கள் எழுதிய மையங்களின் மூலமாகவும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
மூன்று பாடங்கள் வரை தேர்ச்சி பெறாத மாணவர்கள் சிறப்புத் துணைத் தேர்வை எழுத விண்ணப்பங்கள் கடந்த 16ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன. பள்ளி மூலம் தேர்வு எழுதியவர்களுக்கு புதன்கிழமை வரையில் விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
நிரப்பிய படிவங்களே அளிக்க அதே தேதி கடைசியாகும். தனித் தேர்வர்களுக்கு அவர்களது மையங்களில் மே 23 வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். நிரப்பிய படிவங்களை அதே தேதியில் அளிக்க வேண்டும் என்று வசந்தி ஜீவானந்தம் தெரிவித்துள்ளார்.