மத்திய அரசில் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி பொன்னையாற்றின் குறுக்கே ஆந்திர அரசு கட்டவிருக்கும் அணைகளை தடுத்து நிறுத்தி தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மையில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தமிழ் நாட்டு எல்லைக்குள் நிறைவேற்றப்பட வேண்டிய ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே முதலமைச்சர் கருணாநிதியால் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதோடு நின்றுவிடாமல், இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருக்கும் கர்நாடக காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு கருணாநிதி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். இத்திட்டம் செயல்படுத்தப்படுமா என்பது தற்போது கேள்விக்குறியாக உள்ளது.
இந்த சூழ்நிலையில், இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ நடைபெற இருக்கும் ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அரசியல் ஆதாயத்திற்காக தற்போதைய காங்கிரஸ் அரசு வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்ட மக்களின் குடிநீருக்கு ஆதாரமாக விளங்குகின்ற பொன்னையாற்றின் குறுக்கே நூறு தடுப்பணைகள் கட்ட முடிவு செய்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன.
தமிழக மக்களின் உரிமைகளை பறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ள ஆந்திர மாநில அரசின் செயல் வன்மையாக கண்டிக்கதக்கது. ஒருவேளை இந்தப்பிரச்சனையிலும் ஆந்திர மக்களுக்கு ஆதரவாக, அம்மாநில சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடியும் வரை பொறுமை காப்போம்: வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் அனைவரும் காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களியுங்கள் என்று அறிக்கை விடப்போகிறாரா கருணாநிதி?
சதாசர்வகாலமும் தனது குடும்பப் பிரச்சனைகளைப் பற்றியே சிந்திக்காமல், தமிழக மக்களின் பிரச்சனைகளிலும் கருணாநிதி கவனம் செலுத்த வேண்டும். மத்திய அரசில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி, பொன்னையாற்றின் குறுக்கே ஆந்திர அரசு கட்டவிருக்கும் அணைகளை தடுத்து நிறுத்தி தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பாக வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.