''மதுவிலக்கு தொடர்பான விழிப்புணர்வை ஊடகங்கள், கலை நிகழ்ச்சிகள் மூலம் தமிழக அரசு மேலும் விரைபடுத்திட வேண்டும்'' என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளச்சாராயம் அருந்தி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 பேர் பலியானார்கள் என்றும், 14 பேர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர் என்றும் வெளியான செய்தி அறிந்து மனவேதனை அடைந்தேன்.
அந்தக் கள்ளச்சாராயம் தமிழக எல்லைக்குள் தயாரிக்கப்பட்டதல்ல என்று தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் விற்பனை செய்யப்பட்ட இடம் தமிழகத்தைச் சேர்ந்தது. பலியானவர்கள் தமிழக கூலித் தொழிலாளர்கள்.
மதுவிலக்கின் கொள்கை மற்றும் இதுபோன்ற கள்ளச்சாராய பேராபத்து போன்ற விபரங்களில் மக்களுக்கு குறிப்பாக கிராமத்து அடித்தள மக்களுக்கு விழிப்புணர்வு இன்னும் போதிய அளவு இல்லை என்பதையே இப்பரிதாப நிகழ்வு எடுத்துக் காட்டுகிறது.
அவர்களது சாவின் தன்மை வெறுப் படையச் செய்தாலும், பலியானவர் களின் குடும்பத்தின் பாதுகாப்பை எண்ணி பெரும் வேதனையாக உள்ளது. எனவே தமிழக அரசு அக்குடும்பத்திற்கு உதவியாக உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பதோடு, மதுவிலக்கு தொடர்பான விழிப்புணர்வை ஊடகங்கள், கலை நிகழ்ச்சிகள் மூலம் மேலும் விரைவுபடுத்திட வேண்டும் என்று கிருஷ்ணசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.