உணவு பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும்: உணவகங்களுக்கு எ.வ.வேலு எச்சரிக்கை!
சனி, 17 மே 2008 (16:32 IST)
இட்லி, வடை, பூரி, பொங்கல் போன்றவை அன்றாடம் பொதுமக்கள் விரும்பி உண்ணும் உணவு என்பதால் இவற்றின் விலையை உடனடியாக கட்டுபடுத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக ஓட்டல்கள் சங்க நிர்வாகிகளுடன் உணவு அமைச்சர் எ.வ.வேலு இன்று தலைமைச் செயலகத்தில் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தினார். அப்போது, ஓட்டல்களில் உணவு பண்டங்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், ஓராண்டு காலம் நிறைவடைந்த பிறகும் ஓட்டல்களில் உணவுப் பண்டங்களின் விலை குறைக்கப் படாமல் அதிகமாகவே உள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த அரசு எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. அரிசி, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களை இருப்பு வைக்க கட்டுப்பாட்டு ஆணைகள் பிறப்பிக்கவும் முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
சமையல் எண்ணெய்க்கான இறக்குமதி வரியை குறைத்தும், உணவுப் பொருட்களின் இணைய தள வர்த்தகம் முழுவதும் தடை செய்யப்பட்டும், விலையேற்றத்தை தடுக்கவும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இட்லி, வடை, பூரி, பொங்கல் போன்றவை அன்றாடம் பொதுமக்கள் விரும்பி உண்ணும் உணவு என்பதால் இவற்றின் விலையை உடனடியாக கட்டுபடுத்தப்பட வேண்டும்.
1976 ஆம் ஆண்டில் நடை முறையில் இருந்த சில கடுமையான சட்டங்களைப் போல அரசு மீண்டும் சட்டம் இயற்றக் கூடிய நிலையை உணவகங்கள் ஏற்படுத்தக் கூடாது என்று அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தினார்.
உடனடியாக உணவுப் பண்டங்களின் விலையை குறைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக ஓட்டல்கள் உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் உறுதிமொழி அளித்துள்ளார்கள் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.