ஒரு உருண்டை சோற்றில் பூசணிக்காயை மறைக்க முயற்சிக்கிறார் ராமதாஸ்: பொன்முடி குற்றச்சாற்று!
சனி, 17 மே 2008 (17:12 IST)
''உயர் கல்வித்துறையின் 2 ஆண்டு செயல்பாட்டை நடுநிலையோடு விமர்சிக்காமல் ஒரு உருண்டை சோற்றில் பூசணிக்காயை மறைக்க முயற்சித்துள்ளார் ராமதாஸ்'' என்று அமைச்சர் பொன்முடி குற்றம்சாற்றியுள்ளார்.
இது தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆகாத பொண்ணாட்டி கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம் என்ற கிராம பழமொழியை ராமதாஸ் அன்றாடம் செய்து கொண்டிருக்கிறார். அதனால் தான் உயர் கல்வித்துறையின் 2 ஆண்டு செயல்பாட்டை நடுநிலையோடு விமர்சிக்காமல் ஒரு உருண்டை சோற்றில் பூசணிக்காயை மறைக்க முயற்சித்துள்ளார்.
சட்ட சிக்கல்களை சமாளித்து தொழிற்படிப்பு நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் கிராமப்புற மாணவர்கள் 43.9 விழுக்காடு பேர் கூடுதலாக பயன் பெற்றனர். கடந்த ஆட்சியில் அரசு ஒதுக்கீடு 50 விழுக்காடு இருந்ததை 65 விழுக்காடாக இந்த அரசு உயர்த்தியதால் சுமார் 56,000 பேர் பயனடைந்தனர்.
கல்லூரி மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் அறவே ரத்து செய்யப்பட்டு, இலவச பேருந்து பாசும் வழங்கப்படுகிறது. உயர் கல்வியில் கடந்த ஆட்சிக்கும், இந்த ஆட்சிக்கும் வித்தியாசமே இல்லை என்று "உள்நோக்கமே இல்லாத உண்மை விளம்பி' கூறுகிறார்.
அரசு பொறியியல் கல்லூரிகளில் கல்விக்கட்டணம் குறைக்கப்பட்டது இந்த ஆட்சியில் தான். அதிக அளவில் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் மதிப்பெண்கள் குறைத்ததற்கு கூட உள்நோக்கம் கற்பிப்பது காமாலை கண்ணனுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் என்பது போலவே உள்ளது என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.