அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்லூரிகளுக்கு கடிவாளம்: கிருஷ்ணசாமி வலியுறுத்தல்!
வெள்ளி, 16 மே 2008 (15:05 IST)
''அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்லூரிகளுக்கு தமிழக அரசு கடிவாளம் போட வேண்டும்'' என்ற தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றைக்கு கல்வி என்பது வியாபாரப் பொருளாகி விட்டது. சில தனியார் கல்வி நிறுவனங்கள் வியாபாரக் கூடங்களாக மாறிவிட்டன. கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜ் லட்சியத்தை நிலை குலைக்கச் செய்யும் சீரழிவுப் பாதையை நோக்கி சில தனியார் கல்லூரி நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
குறிப்பாக தனியார் பொறியியல், மருத்துவக் கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் இன்றைக்கு ஏழை எளிய, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்களை ஏதோ சமூகத்தில் ஒதுக்கப்பட்ட இனத்தை சேர்ந்தவர்களைப் போல புறக்கணித்து வசதிபடைத்த மற்றும் அயல்நாட்டு மாணவர்களிடம் அரசின் சட்ட திட்ட நடவடிக்கைகள் மற்றும் விதிமுறைகளையும் மீறி பலவாறாக அதிகப் பணத்தை கறந்தும் விடுகின்றன.
இதுபோன்ற தனியார் கல்லூரி நிறுவனங்களால் வசதியான மாணவர்களுக்குத் தரப்படும் கல்வியால் அரசுக்கும், மக்களுக்கும் பயன்படுகிறதா என்றால் அதுவும் இல்லை. அப்பயன் பெரும்பாலும் அயல்நாடுகளையும், நாட்டிலுள்ள பெருமுதலாளிகள் மேலும் மிகப்பெரும் முதலாளிகளாக உருவாக்கவே போய்ச் சேருகிறது.
எனவே, கல்வி அனைத்துப் பிரிவு மக்களுக்கும் பயன்படும் வகையில் அரசு பல்வேறு வழிமுறை வகுத்து நடவடிக்கைகள் எடுத்தும், அதையும் மீறி சில தனியார் கல்லூரி நிறுவனங்களில் மக்கள் விரோத நடவடிக்கையாக தற்போது நிலவி வரும் அதிக கட்டண வசூலுக்கு கடிவாளம் போட வேண்டும்.
தமிழக அரசும், அதிகாரிகளும் மிகுந்த கண்காணிப்போடு அதில் முழுக்கவனத்தைச் செலுத்தி, அந்த அநியாயத்தை தடுத்து நிறுத்தாவிடில் கல்வி தமிழகத்தில் தலைசாய்ந்து நிற்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை மிகுந்த எச்சரிக்கையோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.