துருபிடித்த தடுப்பூசி: அன்புமணிக்கு தமிழக அரசு கடிதம்!
வெள்ளி, 16 மே 2008 (12:11 IST)
மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அனுப்பிய தடுப்பூசிக் குழல்களில் உள்ள ஊசிகள் துரு பிடித்து உள்ளன என்றும் இனிமேலாவது நல்ல ஊசிகளை அனுப்ப வேண்டும் என்று மத்திய அமைச்சர் அன்புமணிக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அன்புமணிக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் எழுதிய கடிதத்தில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கிய தானே செயலிழக்கும் ஊசிக் குழல்களில் சில தரமற்றதாகவும், சில ஊசிகளில் துருவும், குழல்களின் உள்ளே தூசும் காணப்பட்டு அவை தடுப்பூசி போட பயன்படுத்துவதற்கு சிறிதும் தகுதியற்றனவாக உள்ளன.
இதுதொடர்பாக மாநில அரசு 09.05.2008 அன்று மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறைக்கு இந்த ஊசிக் குழல்களின் மாதிரிகளோடு அறிக்கையை அனுப்பியுள்ளது.
அண்மையில் நான்கு குழந்தைகள் தட்டம்மை தடுப்பூசி போட்டவுடன் இறந்து விட்டதால் தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதில் சில மாற்றங்களை இந்த அரசு செய்துள்ளது. தற்போது தடுப்பூசி திட்டம் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், சில தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் மருத்துவர்கள் மேற்பார்வையில் செயல்படுத்தப்படுகிறது.
மேற்கண்ட ஊசிக் குழல்களை பயன்படுத்தினால் தடுப்பூசி திட்டம் மீண்டும் பாதிப்படைவதோடு எதிர்மறையான விளைவுகளும் ஏற்படும். இதனால் இவ்வூசிக் குழல்கள் பயன்படுத்தப் படுவது மாநிலத்தில் உடனடியாக முழுவதுமாக நிறுத்தப் பட்டுள்ளது.
எனவே, தரமான ஊசிக் குழல்களை உடனடியாக அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த தானே செயலிழக்கம் ஊசி குழல்கள் எல்லா மாநிலங்களுக்கும் அனுப்பப் பட்டுள்ளதால், இவைகளின் தரத்தை உறுதி செய்த பின் பயன்படுத்துமாறு எல்லா மாநில அரசுகளுக்கும் உடனடியாக அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.