உலக அமைதிக்காக 10 ஆண்டாக நடைபயணம் செல்லும் கடலூர் வாலிபர்!
வியாழன், 15 மே 2008 (16:38 IST)
உலக அமைதிக்காக கடந்த 10 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் நடந்து வரும் கடலூர் வாலிபர் நேற்று பவானி வந்தடைந்தார்.
webdunia photo
WD
கடலூர் மாவட்டம், நெய்வேலியை சேர்ந்த சி.ஆர்.காலனியை சேர்ந்தவர் துரைராம் (48). இவர் கடந்த 1998 வருடத்திற்கு முன் அப்பகுதியில் கொத்தனாராக பணியாற்றி வந்தார். சிவன் மற்றும் காளியின் தீவிர பக்தராக இருந்த இவருக்கு பல்வேறு சோதனைகள் ஏற்பட்டதன் விளைவாக இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறினாராம்.
பின் கிறிஸ்தவ ஆலயங்களுக்கு சென்றபோது அங்கும் அவர்களின் நடவடிக்கையில் துரைராமிற்கு அதிருப்தி அளித்தது. இதன் காரணமாக கிறிஸ்தவ ஆலயங்களுக்கு செல்வதையும் நிறுத்திவிட்டார். இவருக்கு திருமணமாகி சிவபாக்கியம் என்ற மனைவியும் கனிமொழி, மனோன்மணி என்ற இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
இவரது நடவடிக்கை இவருடைய மனைவி, குழந்தைகளுக்கு பிடிக்காததால் கடந்த 1998ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியே வந்த துரைராம், இந்த உலகத்தில் இருக்கும் மக்கள் அமைதியாக வாழ நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டார்.
அதன்படி முதலில் கன்னியாகுமரிக்கு சென்று அந்த மண்ணை முத்தமிட்டு வணங்கி தன்னுடைய நடைபயணத்தை தொடங்கியுள்ளார். சென்னை, ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், டெல்லி, அரியானா, பஞ்சாப் என இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களை நடந்தே சுற்றிவிட்டு கடந்த ஆண்டு மீண்டும் தமிழகம் வந்துள்ளார்.
கடந்த வாரம் கோயமுத்தூர் வந்து அங்கிருந்து நேற்று பவானி வந்தார். இங்கிருந்து மேட்டூர் வழியாக கர்நாடகா மாநிலம் செல்கிறார் துரைராம். இவர் ஒரு வண்டி வைத்து அதை இழுத்துக்கொண்டே செல்கிறார். அந்த வண்டியில் கட்டில், ஆடைகள், மழைவந்தால் டேரா போடும் வசதி என அனைத்தும் வைத்துள்ளார்.
இது குறித்து துரைராம் கூறுகையில், நாள்தோறும் காலை ஐந்து மணிக்கு நடைபயணத்தை துவங்கி பத்து கி.மீ., துரம் பதினொறு மணிக்குள் கடந்துவிடுவதாகவும் பின் மாலை நான்கு மணிவரை ஓய்வெடுத்துக்கொண்டு நான்கு முதல் இரவு எட்டுமணிவரை மீண்டும் பத்து கி.மீ. தூரம் நடப்பதாகவும் கூறுகிறார்.
நடப்பது தனக்கு ஆனந்தத்தை அளிப்பதாகவும் உலக அமைதி வேண்டி மேற்கொள்ளும் இந்த நடைபயணத்தை அடுத்து வரும் 2012 ம் ஆண்டில் முடிக்கபோவதாகவும் அவர் கூறினார்.