பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு முதலமைச்சர் கருணாநிதி இன்று பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 9ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பள்ளி மாணவி தாரணி 1,182 மதிப்பெண்ணும், இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு பள்ளி மாணவர் ராஜேஷ்குமார் 1,182 மதிப்பெண்ணும் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்தனர். அவர்களுக்கு இன்று முதலமைச்சர் கருணாநிதி தலா ரூ.15,000 பரிசு வழங்கினார்.
இதேபோல 1,181 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு மாணவி ரம்யா, நாமக்கல் மாவட்ட மாணவர் தளபதி குமாரவிக்ரம் ஆகியோருக்கு தலா ரூ.12 ஆயிரத்துக்கான காசோலைகளை முதல்வர் வழங்கினார்.
1,180 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்த நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பள்ளி மாணவி தீபாவுக்கு ரூ.10 ஆயிரத்தையும் முதலமைச்சர் கருணாநிதி வழங்கினார்.
அத்துடன் பரிசு பெற்ற மாணவர்களுக்கான படிப்பு செலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்கும் என்பதற்கான சான்றிதழ்களையும் முதலமைச்சர் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
பரிசுகளையும், பாராட்டுக்களையும் பெற்ற மாணவர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.