அதிகார துஷ்பிரயோகத்துக்காக அமைச்சர் பூங்கோதை தார்மீக பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார். இதேபோல தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரத்தில் கருணாநிதி என்ன செய்யப்போகிறார் என்று அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தொலைபேசி ஒட்டு கேட்கப்படும் சம்பவம் ஒரு மாதத்துக்கு முன்பே தமிழகத்தையே உலுக்கியது. இதன் தொடர்ச்சியாக தனது நெருங்கிய உறவினர் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்கை அவருக்கு சாதகமாக கையாளுமாறு சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை, ஊழல் மற்றும் கண்காணிப்பு துறை இயக்குனரை கேட்டுக்கொள்ளும் தொலைபேசி உரையாடலை ஜனதாகட்சித்தலைவர் சுப்பிரமணிய சாமி வெளியிட்டார்.
பூங்கோதைக்கு வாழ்த்து!
இதனை தொடர்ந்து பூங்கோதை தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். சுய மரியாதையுடன் செயல்பட்டுள்ள அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தனது அமைச்சர் தார்மீக பொறுப்பேற்று செயல்பட்டிருப்பதைப் பயன்படுத்தி கருணாநிதி லாபமடைய முயல்கிறார்.
பூங்கோதை தார்மீக அடிப்படையில் பதவி விலகியுள்ளதன் பின்னணியில் பல்வேறு பிரச்சனைகள் வசதியாக மறைக்கப்பட்டு மக்களின் கவனம் திசை திருப்பப்பட்டுள்ளது. தொலைபேசி ஒட்டு கேட்கப்படும் ஒட்டுமொத்த விவகாரத்திற்கும் கருணாநிதியின் பதில் என்ன?
காவல்துறை உயரதிகாரியிடம் தனது அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்த முயன்றதற்காக பூங்கோதை ராஜினாமா செய்கிறார் என்றால், தமிழக அரசின் தலைமைச் செயலாளரின் நிலை என்ன?
இந்த பிரச்சனையில் அனைவருக்கும் தெரியும்வண்ணம் ஆதாரங்களும், விவரங்களும், சான்றுகளும் கண்முன் தெரியும்போது, இந்த பிரச்சனையில் விசாரணை ஆணையம் மூலம் கருணாநிதி என்ன சாதிக்கப்பார்க்கிறார்?
தொலைபேசி ஒட்டுக்கேட்பு தொடர்பான வாட்டர்கேட் ஊழலுக்காக அமெரிக்க அதிபராக இருந்த ரிச்சர்டு நிக்சன் தனது பதவியையே விலையாக கொடுக்க வேண்டி இருந்தது. கர்நாடக முதலமைச்சராக இருந்த ராமகிருஷ்ண ஹெக்டேவுக்கு தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் வாட்டர்லுவாக முடிந்தது. இத்தகைய முன் உதாரணங்கள் மிகத் தெளிவாக உள்ளன. இப்போதைய கேள்வி, கருணாநிதி என்ன செய்ய போகிறார் என்பது தான்? என்று ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.