பிறந்தநாள் விழா வேண்டாம்: கருணாநிதி!
செவ்வாய், 13 மே 2008 (17:24 IST)
''பிறந்த நாள் அன்று வாழ்த்த வருவது, நிகழ்ச்சிகள் நடத்துவது இவற்றை தவிர்த்திட வேண்டும்'' என்று முதல்வர் கருணாநிதி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் ஜூன் திங்கள் மூன்றாம் நாள் எனக்கு 85வது பிறந்த நாள் என்பதையொட்டி, எனைக் காண வருவது, வாழ்த்த வருவது, நிகழ்ச்சிகள் நடத்துவது, இவற்றைத் தவிர்த்திட வேண்டும். அந்தவாரம் முழுவதும் நான் சென்னையில் இருக்க மாட்டேன்.
என் மன நிலை கருதியும், உடல் நிலை கருதியும், வாழ்த்துக்களை ஏற்றிடும் பணியிலிருந்து எனக்கு விலக்கும் ஓய்வும் வழங்க வேண்டுமென்றும் உற்ற நண்பர்களையும், உயிரனைய உடன்பிறப்புகளையும் கேட்டுக் கொள்கிறேன்.
இந்தக் கண்டிப்பான வேண்டுகோளை அலட்சியப்படுத்தாமல், இந்த நிலை மேற்கொண்ட தவிர்க்க முடியாத சூழலுக்காகப் பொறுத்தருள வேண்டுகிறேன் என்று முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.