2 ஆண்டு ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தி.மு.க. அரசு தோல்வி: ராமதாஸ் குற்றச்சாற்று!
செவ்வாய், 13 மே 2008 (15:06 IST)
''கடந்த இரண்டு ஆண்டு கால ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தி.மு.க அரசு தோல்வி அடைந்து விட்டது'' என்று பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம்சாற்றியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் தமிழ்வழி கல்வி பயின்றவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் சட்டம் ஒன்றை தமிழக அரசு உருவாக்க வேண்டும்.
லாட்டரிச் சீட்டு, கஞ்சா விற்பனை செய்பவர்களையும், அதற்கு துணை போகிறவர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
விலைவாசி உயர்வுக்கு காரணமான ஆன்லைன் வர்த்தகத்திற்கு தடை விதிக்க வேண்டும். சில்லரை வர்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் ஈடுபட தடை விதிக்க வேண்டும்.
தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. இந்த ஆட்சியின் சாதனைகள் குறித்து அரசு பத்திரிகைகளில் விளம்பரம் செய்து சாதனை பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஆனால் இந்த ஆட்சியில் உள்ள பல்வேறு குறைபாடுகளை நாங்கள் தொடர்ந்து பட்டியலிட்டு வருகிறோம். மொத்தத்தில் தி.மு.கவின் இரண்டு ஆண்டு கால ஆட்சி தேர்ச்சி பெறவில்லை என்பதே எனது மதிப்பீடு என்று ராமதாஸ் கூறினார்.