கர்நாடகா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் முக்கிய அணையாக கருதப்படுவது மேட்டூர் அணை. இந்த அணையை நம்பி தமிழகத்தின் தென்மாவட்ட பகுதிகளில் லட்சக்கணக்கா ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது. கடந்த ஆண்டு நிரம்பி வழிந்த மேட்டூர் அணைக்கு நடப்பு ஆண்டில் பெரியளவில் தண்ணீர் வரத்து இல்லமால் இருந்தது.
கடந்த சில நாட்களாக மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளாக கர்நாடகா மாநிலம் காவிரி கரையோரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 1900 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது.
தண்ணீர் வரத்து அதிகரித்து நேற்று மாலை நான்கு மணி நிலவரப்படி வினாடிக்கு 3800 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 98.55 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1200 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நேற்று இரவு அணைக்கு வரும் தண்ணீர் அளவு 2860 கனஅடியாக குறைந்த போதிலும் தொடர் மழையால் மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.