தமிழகத்தில் அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு இல்லை : இல.கணேசன்!
ஞாயிறு, 11 மே 2008 (11:38 IST)
''தமிழகத்தில் பல அரசியல் பிரமுகர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது'' பா.ஜ.க மாநிலத் தலைவர் இல.கணேசன் குற்றம்சாற்றியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகேயுள்ள பூலித்தேவன் நினைவிடத்துக்கு வந்த இல.கணேசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு போய் உள்ளது.
கடந்த ஆண்டில் 1,623 கொலைகள் நடைபெற்றுள்ளன. இந்த புள்ளிவிவரத்தையும் தமிழக அரசே வெளியிட்டுள்ளது. இந்த எண்ணிக்கை, அதற்கு முந்தைய ஆண்டை விட மிகவும் அதிகம். இதில் 6 அரசியல் கொலைகளும் நிகழ்ந்துள்ளன. மேலும், பல அரசியல் பிரமுகர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலிலும் பா.ஜ.க வெற்றி பெறும் என்று அங்கிருந்து வரும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன என்று இல.கணேசன் கூறினார்.