டாஸ்மாக் மதுக் கடைகளின் மூலம் அரசுக்கு கடந்த நிதியாண்டில் (2007- 08) ரூ.8,816 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை குறித்த அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு முந்தைய நிதியாண்டில் ரூ.7,473 கோடி வருவாய் வந்துள்ளது. இதன் மூலம், ஓராண்டில் மட்டும் ரூ.1,343 கோடி கூடுதல் வருவாய் அரசுக்குக் கிடைத்துள்ளது. இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுவகைகள், பீரின் விற்பனையும் கணிசமாக உயர்ந்துள்ளன.
மது விற்பனையை அரசே ஏற்று நடத்தும் திட்டம், கடந்த 2003-ஆம் ஆண்டு நவம்பர் 29-ஆம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆட்சிக்கு வந்த தி.மு.க.வும் அதே நடைமுறையை பின்பற்றி வருகிறது.
2006-ஆம் ஆண்டு மே 13-ஆம் தேதி நிலவரப்படி, 6,699 சில்லறை மதுபான விற்பனைக் கடைகளை தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் நடத்திக் கொண்டிருந்தது.
தமிழகத்தில் தற்போது 6,800 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்தக் கடைகளில் மொத்தம் 33,300 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.