வேலூர், தூத்துக்குடி மாநகராட்சி ஆகிறது: பேரவை‌யி‌ல் மசோதா தாக்கல்!

வெள்ளி, 9 மே 2008 (17:59 IST)
சட்ட‌ப்பேரவை‌யி‌ல் உ‌ள்ளா‌ட்‌சி‌த்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர், தூத்துக்குடி ஆகியவை மாநகராட்சி ஆவது தொடர்பாக சட்ட மசோதாக்களை இ‌ன்று தாக்கல் செய்தார்.

அதில் கூறியிருப்பதாவது: வேலூர் வரலாற்று சிறப்பு வாய்ந்த மற்றும் பாரம்பரியம் மிக்க ஒரு நகரம் ஆகும். பல புகழ் வாய்ந்த மருத்துவ மற்றும் கல்வி நிலையங்கள் அங்கு உள்ளன.

வேலூர் நகரத்தை சுற்றி பெரும் எண்ணிக்கையிலான தோல் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. அந்த பகுதியில் சிறப்பு பொருளாதார மண்டலம் ஒன்றும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களும் அமைய உள்ளன. எனவே வளர்ந்து வரும் கட்டமைப்பு வசதிகளை எதிர் கொள்ளும் பொருட்டு வேலூர் நகராட்சியை மாநகராட்சியாக உயர்த்துவது என அரசு முடிவு செய்துள்ளது.

எனவே வேலூர் மாநகராட்சி அமைக்க புதிய தனிசட்டத்தை இயற்றுவது தேவையாகும். அதற்கு தேவைப்படும் மாற்றங்களுடன் சிறப்பு சட்டத்தை இயற்ற அரசு முடிவு செய்துள்ளது.

தூத்துக்குடி வேகமாக வளரும் நகரம், சேதுசமுத்திர திட்டம் போன்றவற்றால் தூத்துக்குடி நகரத்திலும் அதனை அடுத்துள்ள பகுதிகளிலும் கட்டமைப்பு வசதிகளை பெருமளவு மேம்படுத்துவது, தேவையாக உள்ளது.

எனவே தூத்துக்குடி நகராட்சி மாநகராட்சியாக நிலை உயர்த்தப்படும் என்று நகராட்சி நிர்வாகத் துறை பட்ஜெட் விவாதத்துக்கு பதில் அளித்தபோது உள்ளாட்சி அமைச்சர் அறிவித்தார். அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் தேவைப்படும் மாற்றங்களுடன் ஒரு சிறப்பு சட்டத்தை ஏற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது எ‌ன்று கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்