5 இடங்களில் மீண்டும் சார் பதிவாளர் அலுவலகங்கள்: சுரேஷ்ராஜன்!

வெள்ளி, 9 மே 2008 (11:21 IST)
''நடப்பாண்டில் ஐந்து சாரபதிவாளர் அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்படும்'' என்று சுற்றுலா மற்றும் பதிவுத் துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

ச‌ட்ட‌ப்பேரவையில் துறை மானியக் கோரிக்கை விவாதங்களுக்கு அவர் பதில் அளி‌க்கை‌யி‌ல், கடந்த ஆட்சிக் காலத்தில் மூடப்பட்ட 40 சார் பதிவாளர் அலுவலகங்களை படிப்படியாக மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, கடந்த நிதியாண்டில் 10 சார் பதிவாளர் அலுவலகங்கள் திறக்கப்பட்டன. நடப்பாண்டில் ஐந்து சார்பதிவாளர் அலுவலகங்கள் திறக்கப்படும்.

தற்போதுள்ள பதிவு நடைமுறையின்படி, பொது அதிகார ஆவணங்கள் சார்பதிவாளர் அலுவலக எல்லை வரம்பின்றி எந்த ஒரு சார்பதிவகத்திலும் விருப்பப் பதிவின் கீழ் பதிவு செய்யப்படுவதால் நான்கு புத்தகங்களில் பதிவு செய்யப்படுகின்றன.

இத்தகைய ஆவணப் பதிவின் விவரம், வில்லங்கச் சான்றிதழில் இடம்பெற வகையில்லாததால், பதிவு சொத்தின் உரிமை குறித்த உண்மை நிலையை பொது மக்கள் அறிய வழியில்லை. எனவே இத்தகைய ஆவணங்களை கட்டாயமாகவும் சம்பந்தப்பட்ட சார்பதிவகத்தில் ஒரு புத்தகத்திலும் மட்டும் பதிவு செய்ய பதிவுச் சட்டத்தில் உரிய திருத்தம் மேற்கொள்ளப்படும். இதனால் இத்தகைய ஆவணப் பதிவின் மூலம் நடைபெறும் முறைகேடுகள் அறவே தடை செய்யப்படும்.

மாநகராட்சி அல்லாத பகுதிகளில், பதிவுத் துறையில் தற்போது காலியாக உள்ள முத்திரைத் தாள் விற்பனையாளர் காலிப் பணியிடங்களைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எ‌ன்று அமைச்சர் சுரேஷ் ராஜ‌ன் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்