இலங்கை பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு: ராமதாசுக்கு பிரணாப் முகர்ஜி கடிதம்!
வெள்ளி, 9 மே 2008 (10:42 IST)
இலங்கையில் இன மோதலுக்கு அமைதிப்பேச்சு மூலம் தீர்வு காண்பதில் தான் முன்னேற்றத்திற்கான வழி அடங்கி இருக்கிறது'' என்று ராமதாசுக்கு, அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப்முகர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை தமிழர் சிக்கல் குறித்தும், அதில் இந்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடிதத்திற்கு பதில் அளித்து அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப்முகர்ஜி, பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது: இலங்கை குறித்த நமது கொள்கையானது, இலங்கை இன மோதலுக்கு போர்ப்படை தீர்வு எதுவும் இருக்க முடியாது என்ற உறுதிப்பாட்டை அடிப்படையாக கொண்டது. அந்த நாட்டில் வன்முறையின் அளவையும், மனிதர்களின் துன்பத்தின் அளவையும் குறைக்க வழிவகுக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் வரவேற்கத்தக்கதே. அமைதிப்பேச்சு மூலம் தீர்வு காண்பதில் தான் முன்னேற்றத்திற்கான வழி அடங்கி இருக்கிறது. அத்தகைய தீர்வு ஒன்றின் மூலமாக மட்டுமே, இடர்பாடுகளுக்கு உள்ளாகியிருக்கும் அந்த நாட்டில் நிலைத்த அமைதியை திருப்ப இயலும்.
நமது மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியதன் தேவையை நாங்களும் முற்றிலும் உணர்ந்திருக்கிறோம். இதை முன்னுரிமை அடிப்படையில் இலங்கையின் கவனத்திற்கு அரசு எடுத்து சென்று உள்ளது. எனினும் நமது மீனவர்களுக்கு எதிரான இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச்சூடு நிகழ்வுகள் அல்லது அவர்கள் கைது செய்யப்படும் நிகழ்வுகள் பெரும்பாலும் இலங்கையின் கடல் பகுதியில் தான் நிகழ்ந்துள்ளன.
குறிப்பாக இலங்கையில் நிகழ்ந்து வரும் நடவடிக்கைகளையும், துப்பாக்கி சண்டைகளுக்கு நடுவில் சிக்கிக் கொள்ளக்கூடிய நிலைமையையும் கருத்தில் கொண்டு, நமது மீனவர்கள் பன்னாட்டுக் கடல் எல்லைக்கோட்டை மதித்து நடக்க வேண்டியது முக்கியம். கட்டுப்பாட்டுடன் செயல்படுமாறும், நமது மீனவர்களை மனித நேயத்துடன் நடத்துமாறும், இலங்கை கடற்படையிடம் தெரிவித்திருக்கிறோம் என்று பிரணாப் முகர்ஜி கடிதத்தில் கூறியிருப்பதாக பா.ம.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.