கிராமப்புற புற சுற்றுலா வளர்ச்சி மேம்படுத்தப்படும்: சுரேஷ்ராஜன்!
வியாழன், 8 மே 2008 (18:04 IST)
அயல்நாடு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக கிராமப்புற சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் கூறினார்.
சட்டப்பேரவையில் இன்று அமைச்சர் சுரேஷ்ராஜன் தாக்கல் செய்த சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை மீதான கொள்கை விளக்க குறிப்பில், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் பதிவு செய்யப்பட்ட கிராமிய கலைக்குழுக்கள் மற்றும் இசை நாடக நடிகர் சங்கங்களுக்கு இசைக்கருவிகள் வழங்கப்படும்.
தொன்மை சிறப்பு மிக்க தமிழக ஊரகக் கலைகள் இசை நாடகங்களை பாதுகாக்கும் பொருட்டு பதிவு செய்யப்பட்டு நன்முறையில் தொடர்ந்து இயங்கி வரும் ஊரக கலைக்குழுக்கள் மற்றும் இசை நாடக நடிகர் சங்கங்களில் 10 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு, அவைகள் பயன்பெற தவில், நாதசுரம், பம்பை, ஆர்மோனியம், பறை, கைச்சிலம்பு ஆகியவற்றை வாங்கிட குழு ஒன்றுக்கு ரூ.30,000 வீதம் 10 குழுக்களுக்கு மொத்தம் ரூ.3 லட்சம் வழங்கப்படும்.
2008-09 ஆம் நிதயாண்டில் கூடுதலாக 500 நபர்களுக்கு நலிந்த கலைஞர்களுக்கான நிதியுதவி மாதம் ரூ.100 வழங்கப்படும். இதற்காக ரூ.60 லட்சம் ஆண்டொன்றுக்கு செலவிடப்படும்.
அயல்நாடு, உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக கிராமப்புற சுற்றுலா வளர்ச்சி மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் சுரேஷ்ராஜன் கூறினார்.