''திட்டமிட்டபடி வேலூர் கோட்டையில் உள்ள நவாப் பள்ளி வாசலில் நாளை தொழுகை நடக்கும்'' என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் அறிவித்துள்ளார்.
சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாதுகாக்கப்பட்ட நினைவசின்னமான வேலூர் கோட்டையில் 48 அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. புதிய அலுவலகங்களும் அங்கு தொடங்கப்படுகின்றன. ஆனால் தொல்பொருள்துறை அதனை மவுனமாக வேடிக்கை பார்க்கிறது.
பள்ளி வாசலை தபால் அலுவலகமாக மாற்றுவதற்கும் சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதனையும் தொல்பொருள் துறை கண்டுகொள்ளவே இல்லை. வேலூர் கோட்டை பள்ளி வாசலில் தொழுகை நடத்த அனுமதிக்க மாட்டோம் என்ற தொல்பொருள் துறையின் நிலைப்பாடு அதன் பாரபட்ச போக்கை வெளிக்காட்டுகின்றது.
இக்கோட்டைக்குள் இருக்கும் ஜலகண்டேஸ்வரர் கோயில், புதிதாக கட்டப்பட்டுள்ள இரு சிறு கோயில்களில் வழிபாடு நடப்பதற்கும், 48 அரசு அலுவலகங்கள் முழுவீச்சில் இயங்குவதற்கும் தொல் பொருள் துறை அனுமதித்திருக்கும் போது, பள்ளி வாசலில் தொழுகை நடத்துவது மட்டும் பழம்பெரும் நினைவு சின்னத்துக்கு ஊறுவிளைவிக்கும் என்று கூறுவது எப்படி நியாயமாகும்?
சென்னையில் நடந்த பேச்சுவார்த்தையில் மே 5ஆம் தேதி முதல் வேலூர் கோட்டை பள்ளிவாசலில் தொழுகைக்கு திறந்து விட ஒப்பு கொள்ளப்பட்டது. ஆனால் அதிகாரிகள் கொடுத்த இந்த வாக்குறுதியை மீறிவிட்டார்கள். இதனால் 9ஆம் தேதி (நாளை) எனது தலைமையில் வேலூர் கோட்டை பள்ளி வாசலில் நண்பகல் தொழுகை நடத்த இருக்கிறோம். இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கிறார்கள் என்று ஜவாஹிருல்லாஹ் கூறினார்.