பெண்சிசு கொலையைத் தடுக்க விழிப்புணர்வு வாசகங்கள் : தமிழக அரசு வேண்டுகோள்!
வியாழன், 8 மே 2008 (10:45 IST)
பெண் சிசு கொலையை தடுக்கும் வகையில் விழிப்புணர்வை உருவாக்கும் நல்ல வாசகங்களை அனுப்ப மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு செய்திக் குறிப்பில், 1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் பெண் சிசு பிறப்பு விகிதம் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 974-ஆக இருந்தது. இந்த நிலை 1981-ம் ஆண்டு 967 ஆகவும், 1991-ம் ஆண்டு 948 ஆகவும், 2001-ம் ஆண்டு 942 ஆகவும் குறைந்து விட்டது. பெண் சிசுவின் எண்ணிக்கை குறைவால், வருங்கால சமுதாயம் பாதிப்புக்கு உள்ளாகும். பல தீமைகள் ஏற்படும்.
எனவே, பெண் சிசு கொலையைத் தடுக்க மக்கள் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும். பெண் சிசு கொலை தடுப்புக்காக கருக்கலைப்பு முறைப்படுத்துதல் சட்டம், கருவுருதலுக்கு முன் பாலினத் தேர்வு தடைச் சட்டம் ஆகிய சட்டங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. குற்றம் செய்துள்ள பலர் இந்தச் சட்டத்தால் தண்டிக்கப்பட்டு வருகின்றனர். ஆனாலும் பெண் சிசு கலைப்பு, கொலை, பெண்களை புறக்கணித்தல் போன்ற நிகழ்வுகள் நடக்கின்றன.
இந்த நிலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பத்திரிகை, தொலைக்காட்சி, ரேடியோ, துண்டு பிரசுரம், விளம்பரப் பலகை உட்பட பல ஊடகங்கள் வழியாக விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் இந்த பொருள் குறித்து மக்களிடையே போட்டி நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. பெண் கருக் கொலை பற்றிய கவர்ச்சியான வாசகங்களை விழிப்புணர்வுக்காக எழுதுவது வரவேற்கப்படுகிறது.
(ரத்த தானத்துக்காக, `உதிரம் கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்'; குழந்தைத் தொழிலாளர்களுக்காக, `சிறார் வருமானம் பெற்றோருக்கு அவமானம்' போன்ற வாசகங்கள்).
தேர்ந்தெடுக்கப்படும் மிகச் சிறந்த வாசகங்களுக்கு முறையாக முதல் பரிசு ரூ.3 ஆயிரம், 2-ம் பரிசுக்கு ரூ.2 ஆயிரம், 3-ம் பரிசுக்கு ரூ.500 மற்றும் 5 நபர்களுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்படும். தேர்வுக் குழுவினால் வாசகங்கள் ஆய்வு செய்யப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். போட்டி வாசகங்கள் 30ஆம் தேதி வரை பெறப்படும். பரிசு பெற்றவர்களுக்கு தபால் மூலம் விவரம் தெரிவிக்கப்படும். வாசகங்களை தனியாக எழுதி, முத்திரையிடப்பட்ட உரைகளில், 'பெண் கருக்கொலை தடுப்பு போட்டி- மே 2008' என்று எழுதி அனுப்ப வேண்டும்.
இந்த கடித உரைகளை, `இயக்குனர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை (நிர்வாகப் பிரிவு 7), சென்னை-6' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களை 044-24321835 (எக்ஸ்டென்சன்-284) என்ற தொலைபேசி எண்ணில் கேட்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.