உத்தப்புரம் தீண்டாமைச்சுவர் முழுமையாக அகற்றப்பட வேண்டும்: திருமாவளவன்!
வியாழன், 8 மே 2008 (10:24 IST)
உத்தப்புரம் தீண்டாமைச்சுவர் முழுமையாக அகற்றப்பட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரையை அடுத்த உத்தப்புரம் கிராமத்தில் 20 ஆண்டுகளாக ஜாதி இந்துக்கள் எழுப்பியிருந்த 150 அடி நீளமும் 10 அடி உயரமும் கொண்ட தீண்டாமைச்சுவரின் 15 அடி நீளம் மட்டும், தமிழ்நாடு அரசால் அகற்றப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
அதே வேளையில், தீண்டாமைசுவருக்கு எதிரான குரல்கள் வலிமை பெறுவதைக் கண்டு இந்த சுவரை எழுப்பிய ஒரு பிரிவினர், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தமது குடும்ப அட்டைகளை திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தை நடத்தியது கண்டனத்திற்குரியது.
6ஆம் தேதி தீண்டாமை சுவரின் ஒரு பகுதி அகற்றப்பட்டதை கண்டித்து ஜாதி இந்துக்கள் தமது வீடுகளைப் பூட்டி விட்டு, காட்டுப்பகுதியில் சென்று வெட்டவெளியில் வாழப்போவதாக கூறியுள்ளனர். இந்த செயல் கிஞ்சிற்றும் மனிதப்பண்பற்றது.
அத்துடன் 150 அடி நீள தீண்டாமை சுவற்றின் 10-ல் ஒரு பங்கான 15 அடியை மட்டும் அகற்றியிருப்பது ஒரு சிறிய ஆறுதல் தான் என்றாலும், 150 அடி நீளச்சுவரும் அகற்றப்படும் போது தான் இத்தனை ஆண்டுகளுக்கும் இந்த தீண்டாமைச்சுவர் தலித்துகளுக்கு ஏற்படுத்திய காயத்தின் வலி ஆறத்தொடங்கும். எனவே தீண்டாமைச்சுவரின் எஞ்சிய பகுதியையும் அகற்றிட முதலமைச்சர் கருணாநிதி உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.