புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரர் ஆலயத்தில் உள்ள கணேசன் என்ற யானைக்கு மைக்ரோசிப் பொருத்தப்பட்டது.
கோயில்களிலும், காடுகளுக்கு வெளியே வசித்து வரும் யானைகளுக்கு மைக்ரோ சிப் பொருத்தவேண்டும் என்ற மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் உத்தரவுகளுக்கேற்ப முதன் முதலாக திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில் யானைக்கு இந்த சிப் பொருத்தப்பட்டுள்ளது.
யானையின் உடலியல் விவரங்கள், அதாவது, அதன் வயது, உயரம், எடை, பிறப்பு உள்ளிட்ட பிற நிலையான விவரங்கள் இந்த சிப்பில் நிரலாக்கப்பட்டுள்ளன.
சிப் பொருத்தப்படும் ஒவ்வொரு யானைக்கும் ரகசிய சங்கேத எண் வழங்கப்படும். அதனை வைத்து ஒரு மையமான இடத்திலிருந்து யானைகளின் போக்கை கணினி மூலம் அலுவலர்கள் சிலர் கண்காணிப்பார்கள்.
இதனால் யானைகள் திசை மாறிப் போவதும், வேட்டையாடப்படுவதும் தடுக்கப்படும். மேலும் யானைகளின் உடல் நிலை மாற்றங்களையும் கண்காணித்து அதன் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் என்று அமைச்சகத்தின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
கோவையில் உள்ள கால்நடை மருத்துவர் மனோகரன், திருநள்ளாறு கோயில் யானையின் இடது காதில் இந்த 1.5 அங்குல மைக்ரோ சிப்பை பொருத்தினார்.