''தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிட்கோ மூலம் 23 புதிய தொழிற்பேட்டைகள் நிறுவப்படும்'' என்று ஊரகத் தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் ஊரகத் தொழில்துறை மானியக் கோரிக்கையை தாக்கல் செய்து அமைச்சர் கூறுகையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிட்கோ மூலம் 23 புதிய தொழிற்பேட்டைகள் நிறுவப்படும். திருச்சி மாவட்டத்தில் வாழவந்தான் கோட்டை மற்றும் கும்பக்குடி, தர்மபுரி மாவட்டத்தில் கடகத்தூர்.
திருவாரூர் மாவட்டத்தில் வைப்பூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தண்டரை, திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர் அருகே உள்ள முனியந்தாங்கல், மதுரை மாவட்டத்தில் சேடப்பட்டி, கோவை மாவட்டத்தில் திருப்பூர் அருகே உள்ள கண்டியங்கோயில் உள்ளிட்ட 23 இடங்களில் இந்த புதிய தொழிற் பேட்டைகள் அமைக்கப்படும்.
தேனியில் தொழில் நுட்ப பூங்கா அமைப்பதற்கு நிலம் எடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. காட்பாடி, திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட 7 இடங்களில் உள்ள தொழிற்பேட்டைகள் ஒரு கோடியே 51 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
இவ்வாண்டில் கோவில்பட்டி, திருவெறும்பூர், கும்பகோணம், காரைக்குடி, கும்மிடிப்பூண்டி, வத்தலகுண்டு, ஆண்டிபட்டி உள்ளிட்ட 19 இடங்களில் உள்ள தொழிற்பேட்டைகளையும் மேம்படுத்த சிட்கோ திட்ட மிட்டுள்ளது என்று அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி கூறினார்.