பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.10.75 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு
புதன், 7 மே 2008 (13:43 IST)
விபத்து, வெள்ளத்தால் பலியானவர்களின் குடும்பத்துக்கும், படுகாயம் அடைந்தவர்களுக்கும் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.10.75 லட்சம் நிதியுதவியை அறிவித்து முதல்வர் கருணாநிதி இன்று உத்தரவிட்டுள்ளார்.
சட்டப் பேரவை விதி எண். 110இன் கீழ் முதலமைச்சர் கருணாநிதி இன்று பேரவையில் படித்த அறிக்கையில், வால்பாறை நீர்வீழ்ச்சியில் உயிரிந்த வசந்தாமணி, கீர்த்தனாவின் குடும்பத்துக்கு தலா 50,000 ரூபாய் நிவாரண நிதியும், காளியூர் கிராமத்தை சேர்ந்த ஐந்து பேர் பரிசல் கவிழ்ந்து உயிரிழந்தனர். அவர்களில் ஏற்கனவே ஒருவருக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கப்பட்டு விட்டது. மீது நான்கு பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியும் வழங்கப்படும்.
நாமக்கல் மாவட்டம், பில்லூர் கிராமத்தில் ஆற்றில் அடித்து இழுத்து செல்லப்பட்டு இறந்து போன பத்து வயது சிறுவன் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் நிதியும், குடியாத்தம் தொகுதியில் வனத்துறையினரின் மிரட்டலுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட தாஜ் ஷெரீப் என்பரின் குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியும் வழங்கப்படும்.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 22வது வட்டத்தில் காலரா காரணமாக உயிர் நீத்த 5 வயது சிறுவன் சுரேஷ் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் நிதியும், அரூரில் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டு இறந்துபோன அமுது இனியவன், கிருஷ்ணம்மாள் ஆகியோரின் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியும், காங்கேயத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்த மூன்று பேர் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரமும், காயம் அடைந்த 15 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 ஆயிரம் நிதியும் வழங்கப்படும்.
காவேரிப்பட்டணத்தில் குடியரசு தின விழாவில் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்பிய போது விபத்தில் மரணம் அடைந்த சென்னப்பன் மகன் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவியும், திருத்தணி ஸ்டாலின் நகரில் சுவர் விழுந்து பலியான மங்கம்மாள் என்பவர் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும்.
குடியாத்தத்தில் கல்குவாரி குட்டையில் மூழ்கி பலியான சூரியா, சரவணன் ஆகியோர் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவியும், அம்பாசமுத்திரம் அடுத்த அகஸ்தியர்பட்டி கிராமத்தில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பலியான திலீபன் என்பவரின் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.