தமிழகத்தில் 90 துணை மின் நிலையம் அமைக்கப்படும்: ஆற்காடு வீராசாமி!
வியாழன், 8 மே 2008 (10:16 IST)
''இந்த ஆண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 90 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்'' என்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது தி.மு.க. உறுப்பினர் முல்லைவேந்தன், அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் செங்கோட்டையன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் லீமாரோஸ், காங்கிரஸ் உறுப்பினர் பழனிச்சாமி ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் ஆற்காடு வீராசாமி பதில் அளிக்கையில், இந்தியாவில் முதல்முறையாக ஒரே ஆண்டில் 90 துணை மின் நிலையங்கள் அமைத்திட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு பல்வேறு பகுதிகளில் இவை அமைக்கப்படும்.
விவசாயிகளுக்கு பகலில் 6 மணிநேரமும், இரவில் 12 மணிநேரமும் மின்சாரம் வழங்கும் நடைமுறை கடந்த 25 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது. பகலில் தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் தர வேண்டும் என்பதால் தான் இவ்வாறு வழங்குகிறோம்.
மின் உற்பத்தி நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டால் விவசாயிகளுக்கு பகலில் கூடுதல் மின்சாரம் வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்கும். தற்போது விவசாயத்திற்கு மின் இணைப்பு கேட்டு 4 லட்சம் பேர் விண்ணப்பித்து இருக்கிறார்கள். ஆண்டுக்கு 40,000 மின் இணைப்புகள் வழங்கி வருகிறோம். நிதிச்சுமை அதிகம் என்பதால் இதை கூடுதலாக்க இயலாது என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.