பொறியியல் பட்டப்படிப்பான பி.இ.-யில் சேர 12ஆம் வகுப்பு இறுதித் தேர்வ்வில் பெற வேண்டிய குறைந்தபட்ச ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண்ணை 60 விழுக்காட்டிலிருந்து 55 விழுக்காட்டாக தமிழக அரசு குறைத்துள்ளது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மதிப்பெண் விகிதம் 55 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாகவும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர் மரபினருக்கு 50 விழுக்காட்டிலிருந்து 45விழுக்காடாகவும் ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. பட்டியல் இனத்தவர் மற்றும் மலைவாழ் பழங்குடி வகுப்பினர் 12ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி மட்டும் பெற்றாலே பி.இ. சேர முடியும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
சட்டப்பேரவையில் உயர் கல்வித் துறை மானியக் கோரிக்கை விவாதங்களுக்கு அமைச்சர் பொன்முடி செவ்வாய்க்கிழமை பதில் அளிக்கும்போது இது தொடர்பாக கூறியதாவது:
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 272-ஆக உயர்ந்துள்ளன. 2006-07-ல் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து சிறுபான்மையினர் அல்லாத பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு 65 விழுக்காடாகவும் சிறுபான்மையினர் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு 50 விழுக்காடாகவும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக 2006-07-ம் ஆண்டு முதல் நுழைவுத் தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான கிராமப்புற மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் அதிக அளவில் சேருவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
எனினும் குறைந்தபட்ச ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் காரணமாக (60 விழுக்காடு) 2006-07-ம் கல்வி ஆண்டில் மாணவர்கள் சேராமல் 19,652 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக இருந்தன. 2007-08-ம் கல்வி ஆண்டில் 14,721 இடங்கள் காலியாக இருந்தன. இந்த ஆண்டு புதிதாக அரசு மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிராமப்புற மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் பொறியியல் கல்லூரிகளில் படிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் பொறியியல் கல்லூரிகளில் இடங்கள் காலியாக இருப்பதையும் மனத்தில் கொண்டு நடப்புக் கல்வியாண்டு (2008-09) முதல் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் அதிக அளவில் சேரும் வகையில், குறைந்தபட்ச மதிப்பெண் விகிதத்தைக் குறைக்க அரசு முடிவு செய்துள்ளது என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.