சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் நத்தம் விசுவநாதன் கொண்டு வந்த ஒரு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் தொடக்க கல்வி இயக்குனருடைய கையெழுத்தை போலியாக போட்டு 9 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்து இருக்கிறார்கள். இது போன்ற பிரச்சினைகளில் யாரையும் தப்ப விடாமல் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதிலில், மாவட்ட அளவில் ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான உத்தரவில் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் தான் கையெழுத்து இடுவார். ஆனால் ஒரு ஆசிரியர் மாறுதல் உத்தரவில் மாநில தொடக்கக்கல்வி இயக்குனரின் கையெழுத்தை பார்த்த திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலர் உடனடி யாக எங்களுக்கு தகவல் அனுப்பினார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட 9 ஆசிரியர்களும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு காரணமான உதவி கல்வி அலுவலர் குரு சண்முகம் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் தொடர்புடைய மேலும் 2 பேர் தலைமறைவாக இருப்பதால் அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். யாரையும் காப்பாற்றுவதற்கு இந்த அரசு முயற்சி செய்யவில்லை. இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
வேறு எங்கும் இத்தகைய செயல் நடைபெறவில்லை. இருந்தாலும் இது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.