''தமிழகம் அமைதி பூங்காவாக திகழ அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்'' என்று முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தபுரத்தில் இரு சமுதாயத்தினர் வசிக்கும் பகுதியில் பல ஆண்டுகளாக உள்ள சுவரின் வழி ஏற்படுத்தப்பட்டு, இரு சமூகத்தினரும் அங்கு ஒற்றுமையுடன் இருப்பதாக கூறிய அமைச்சர் பரிதி இளம்வழுதி, இரு சமூகத்தினரும் ஒன்றுபட்டு வாழ நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கு நன்றியும் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சனம், பா.ம.க உறுப்பினர் கோ.க.மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் நன்மாறன், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் சிவபுண்ணியம், விடுதலைச்சிறுத்தைகள் உறுப்பினர் செல்வம் ஆகிய உறுப்பினர்களும் முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.
அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் துரைராஜ் பேசுகையில், உத்தபுரத்தில் வாழ்வதற்கு பாதுகாப்பு இல்லை என்று மக்கள் ஊரைவிட்டு வெளியேறும் நிலை உள்ளது. இதற்கு அரசு என்ன பரிகாரம் வைத்திருக்கிறது' என்றார்.
இதைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதி பேசுகையில், மதுரை மாவட்டம் உத்தபுரம் பகுதி பிரச்சனை தமிழ்நாட்டில் உணர்ச்சி அலைகளை உருவாக்கி இருந்ததை நாம் நன்கு அறிவோம். இந்த பிரச்சனை ஜாதி மோதலாக உருமாற்றம் பெறுமோ என்று அச்சம் ஏற்பட்ட நேரத்தில் தான் தற்போது ஒரு சுமூக சூழல் ஏற்பட்டுள்ளது.
இரு சமூகத்தினருக்கும் இடையே ஒருமித்த கருத்து உருவாகி உடன்பாடு ஏற்பட்டுவிட்டதாக சொல்ல முடியாது. அங்கு வாழும் தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிட மக்கள் சுவர் இருப்பதை அவமானமாக கருதி அதனை இடிக்க வேண்டும் என்று ஆவேசமாக சொல்கின்றனர். ஆனால் இதனை அனுமதிக்க மாட்டோம் என்று மற்ற சமூகத்தினர் கூறுகின்றனர்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு எழுந்த ஒரு கலவரம் விளைவாக அங்கு சுவர் எழுப்பப்பட்டது. அதன் பிறகும் அவ்வப்போது கலவரங்கள், மோதல்கள் அந்த பகுதியில் நடைபெற்று வந்துள்ளன. மீண்டும் அத்தகைய நிலவரங்கள் ஏற்பட்டு விடுமோ என்ற கவலையின் காரணமாகவே அங்கு அமைதி ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த பிரச்சனையை உறுப்பினர் என்னுடைய கவனத்திற்கும், இந்த அவையின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளார்.
நானும், ஆட்சித் தலைவருடன் தொடர்பு கொண்டு உத்தபுரத்தில் பாதையும் வேண்டும்; மற்ற பிரிவினருக்கு பாதுகாப்பும் வேண்டும்; அதற்குரிய நடவடிக்கையை எடுங்கள் என்று கூறினேன். அதன்படி அந்த நீண்ட உயர்ந்த சுவரில் ஒரு பெரிய நுழைவாசலை உருவாக்கி வழியை ஏற்படுத்தி அந்த வழியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று உருவாக்கியிருக்கிறோம்.
இரு சமூகத்தினரும் அங்கு சகோதரத்துவத்துடன் வாழட்டும் என்று இதனை செய்துள்ளோம். இந்த தீர்வில் கோபம் கொண்டவர்கள் தங்களை உயர் வர்க்கம் என்று சொல்லிக் கொள்ளும் சிலர் இதனை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று கூறி வருவாய்துறை அதிகாரியிடம் தங்கள் குடும்ப அட்டைகளை கொடுத்துவிட்டு மலைப்பகுதியில் வாழப்போகிறோம் என்று சென்றிருக்கிறார்கள்.
ராணுவ பாதுகாப்பு!
அவர்கள் கோபத்தின் காரணமாகவே இப்படி நடந்து கொண்டதாக கருத வேண்டுமே தவிர, அவர்களையும் ஜாதியின் மீது விருப்பம் உள்ளவர்களாக நாம் கருதக் கூடாது. அங்கு வாழும் உயர் ஜாதி வர்க்கத்தினருக்கு கூடுதல் பாதுகாப்பு தேவை என்றால், மத்திய அரசிடம் பேசி ராணுவத்தை கூட வரவழைத்து தருகிறோம். ராணுவம் வரவழைக்கப்படும் என்கிற சுடு சொல்லைவிட இன்னும் ஜாதி இருப்பதாக ஒப்புக் கொள்வது தான் பெரிய அவமானமாகும். ஜாதி வேற்றுமை கூடாது.
உத்தபுரம் உத்தமபுரமானது!
இதனால் சிந்தப்படும் ரத்தம் நம் ரத்தம். பாதிக்கப்படுவர்கள் நம்முடைய மக்கள் என்பதை உணர்ந்து தமிழகம் அமைதி பூங்காவாக திகழ அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். இதுவரை சமத்துவம் இல்லாமல் இருந்த நிலைமாறி உத்தபுரத்தில் இன்று சமத்துவம் ஏற்பட்டிருப்பதால் இனி உத்தபுரத்தை உத்தமபுரம் என்று அழைக்கலாம் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.