தென் மாவட்டங்களில் முதலீடு செய்தால் வரிச்சலுகை: தமிழக அரசு!

செவ்வாய், 6 மே 2008 (11:03 IST)
தென் மாவட்டங்களில் ரூ.50 கோடிக்கும் மேல் முதலீடு செய்தாலவரிச் சலுகை அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சட்டப் பேரவையிலதொழில் துறை-தகவல் தொழில்நுட்பவியல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள்:

ரூ. 250 கோடிக்கு மேல் முதலீடுகள் செய்யும் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு வரிச் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தென் மாவட்டங்களில் ரூ.50 கோடிக்கும் மேலாக முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு பல்வேறு வரிச் சலுகைகள் அளிக்கப்பட உள்ளன.

ரூ. 50 கோடிக்கு மேல் ரூ. 100 கோடி வரை முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு, அவர்கள் மூன்று ஆண்டுகளில் செலுத்த வேண்டிய மதிப்புக் கூட்டு வரியை, ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு திரும்ப செலுத்தும் வகையில், 0.1 வ‌ிழு‌க்காடு வட்டி வீதத்தில் கடனாக வழங்கப்படும்.

ரூ. 100 கோடிக்கு மேல் ரூ. 200 கோடி வரை முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு அவர்கள் நான்கு ஆண்டுகளில் செலுத்த வேண்டிய மதிப்புக் கூட்டு வரியை ஏழு ஆண்டுகளுக்கு பின் திரும்பச் செலுத்தும் வகையிலான கடனாக 0.1 ‌விழு‌க்காடு வட்டி வீதத்தில் வழங்கப்படும்.

ரூ.200 கோடிக்கு மேல் ரூ. 250 கோடி வரை முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு அவர்கள் ஐந்து ஆண்டுகளில் செலுத்த வேண்டிய மதிப்புக் கூட்டு வரியை ஏழு ஆண்டுகளுக்குப் பின் திரும்பச் செலுத்தும் வகையிலான கடனாக 0.1 ‌விழு‌க்காடு வட்டி வீதத்தில் வழங்கப்படும்.

தற்போது, ரூ. 250 கோடியிலிருந்து ரூ. 1,500 கோடி வரையிலான முதலீடுகளுக்கு வரிச் சலுகைகள் கடனாக வழங்கப்படுகின்றன. தென் மாவட்டங்களுக்கு சிறப்புச் சலுகையாக அது மானியமாக வழங்கப்படும் எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்