இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்தியாவின் முன்னணி டயர் தயாரிப்பு நிறுவனமாகிய எம்.ஆர்.எப் நிறுவனம் தொழில் வளர்ச்சியில் பின் தங்கியுள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு புதிய ரேடியல் டயர் தொழிற்சாலையை நிறுவிடவும், சென்னை அரக்கோணத்தில் உள்ள தனது ரேடியல் டயர் தொழிற்சாலையை விரிவுபடுத்திடவும் திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசின் சார்பில் தொழில் துறைச் செயலாளர் எம்.எப்.பாரூக்கி, எம்.ஆர்.எப். நிறுவனத்தின் சார்பில் அதன் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் கே.எம்.மாமேன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
எம்.ஆர்.எப். நிறுவனம் 900 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் செயல்படுத்தவுள்ள இத்திட்டத்தின் முதற்கட்டத்தில் மாதம் ஒன்றுக்கு 3 லட்சத்து 50 ஆயிரம் டிரக் மற்றும் கார் வாகனங்களுக்குத் தேவையான ரேடியல் டயர்களையும், இரண்டாம் கட்டத்தில் இரு மடங்காக 7 லட்சம் ரேடியல் டயர்களையும் உற்பத்தி செய்திடத் திட்டமிட்டுள்ளது.
இத்தொழிற்சாலை முதற்கட்டத்தில் 2500 பேருக்கு நேரடி வேலை வாய்ப்புகளையும், 5000 பேருக்கு மறைமுக வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.