ரூ.1,500 கோடிக்கு வரி சலுகை: மத்திய அரசுக்கு கிருஷ்ணசாமி பாராட்டு!
புதன், 30 ஏப்ரல் 2008 (16:25 IST)
ரூ.1,500 கோடிக்கு வரிச் சலுகை அறிவித்த மத்திய அரசுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பணவீக்கத்தை குறைக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் அதன் தொடர்ச்சியாக பல்வேறு பொருட்களுக்கு இறக்குமதி வரியை ரூ.1,500 கோடிக்கு ரத்து மற்றும் குறைப்பு சலுகைகளை அளித்து நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்த செய்தி நாட்டின் வளர்ச்சிக்கு ஓர் திருப்புமுனையாகும்.
இரும்புப் பொருட்களுக்கான 5 மற்றும் 14 விழுக்காடு இறக்குமதி வரி, எதிர் தீர்வைகள் அடியோடு நீக்கப்பட்டுள்ளன. பால் பவுடருக்கான இறக்குமதி வரி 15 விழுக்காட்டில் இருந்து 5 ஆகவும், வெண்ணெய், எண்ணெய் மீதான இறக்குமதி வரி 40 விழுக்காட்டிலிருந்து 30 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளன.
எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், இரண்டு மூன்று சக்கர மின்சார வாகனங்கள் ஆகியவற்றுக்கு வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. சிமெண்ட் விலையைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வருவது மட்டுமல்ல, அது தொடர்பான தொழில்கள், வேலை வாய்ப்புகள் பெருகும். எனவே இந்த முடிவினை மேற்கொண்ட மத்திய அரசுக்கு, குறிப்பாக சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.