தொழிலாளர்களின் உரிமைகளைப் போற்றிடும் தமிழக அரசின் சார்பில் தொழிலாளர் சமுதாயத் தோழர்கள் அனைவருக்கும் என் இதயங்கனிந்த மே தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
முதலமைச்சர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள மே தின வாழ்த்து செய்தியில், மே நாள்! மேதினி எங்கும் உழைப்பாளர் பெருமையை உரைத்திடும் திருநாள்! வயிறார உண்டு சுவைத்திடவும், வகைவகையாய் வண்ண வண்ண ஆடைகளை உடுத்தி மகிழ்ந்திடவும், விரும்பிடும் இடமெல்லாம் சுகமாகச் சென்று தங்கி, சொகுசாக மீண்டிடவும், நுகர்ந்திடும் வசதிகளுடன் குழந்தைகள் சூழக் கூடிக் களித்து வாழ்ந்திடவும் உலக மக்களுக்குத் தேவையானவற்றை உருவாக்கிடத் தினம் தினம் உழைத்திடும் தொழிலாளர்களை நினைந்து மகிழ்ந்து நன்றியுடன் போற்ற வேண்டிய பொன்னாள் இந்த மே நாள்!
இந்நன்னாளில் தொழிலாளர் சமுதாயத் தோழர்களுக்கு என் இதயம் கனிந்த இனிய மே தின நல்வாழ்த்துகள் உரித்தாகுக. 1929 செங்கற்பட்டு சுயமரியாதை மாநாட்டில், "தொழிலாளர்கள் ஆற்றுகின்ற பணிக்கு ஏற்பவும், அவர்களுடைய தேவைக்கு ஏற்பவும் ஊதியம் பெற்றாக வேண்டும்; அந்த ஊதியத்தை அவர்களுக்கு வழங்கியாக வேண்டும்" என்றார் தந்தை பெரியார்.
''1889ஆம் ஆண்டு சர்வதேச சமதர்ம மாநாடு பாரிஸ் பட்டணத்தில் கூடி, மே மாதம் முதல் தேதியை உலகப் பாட்டாளி மக்களின் விடுதலை நாளாகக் கொண்டாடும்படி தீர்மானம் நிறைவேற்றிற்று. அது முதல் மே தினம் உலகிலே எல்லா நாடுகளிலும் பாட்டாளிகளின் விடுதலை நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது'' என்றார் பேரறிஞர் அண்ணா.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் கொள்கை வழிநின்று திராவிட முன்னேற்றக் கழக அரசு தொழிலாளர் நலன் காத்திடும் பல்வேறு பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.
தொழிலாளர் சமுதாயம் நலம்பெற, வளம்பெற அவர்கள் குடும்பத்தார் சுகம்பெற அடுக்கடுக்கான திட்டங்களைச் செயல்படுத்தி தொழிலாளர்களின் உரிமைகளைப் போற்றிடும் தமிழக அரசின் சார்பில் தொழிலாளர் சமுதாயத் தோழர்கள் அனைவருக்கும் என் இதயங்கனிந்த மே தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.