பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான உள்ஒதுக்கீட்டில் இஸ்லாமியர், கிறிஸ்தவர்களுக்கு சமமான வாய்ப்பு கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.
சட்டப்பேரவையில் இன்று பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் உறுப்பினர் அசன்அலி, சிறுபான்மையினருக்கான 7 விழுக்காடு இடஒதுக்கீட்டில் சில குழப்பங்களும், குளறுபடிகளும் இருப்பதாக சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறுகையில், சிறிய அளவில் குழப்பம் இருப்பது தெரியவந்து, முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், இருதரப்பினருக்கும் சம உரிமைகளும், வாய்ப்புகளும் கிடைத்திட முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று கூறினார்.
அவரைத் தொடர்ந்து மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசுகையில், இந்த உள்ஒதுக்கீட்டில் கிறிஸ்தவர்களுக்கு கிடைத்த அளவுக்கு இஸ்லாமியர்களுக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற தகவல் முதலமைச்சருக்கு தெரியவந்து, அந்த துறை அதிகாரிகள் மற்றும் சிறுபான்மை சமுதாயத்தினரிடம் என்னை பேசுமாறு கூறினார்.
இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி சர்வீஸ் ஆணையம் மூலம் இந்த இரு பிரிவினருக்கும் சரிசமமான வாய்ப்புகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் இதற்கான அரசாணை வெளியிடப்படும் என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.