6 குழந்தைகள் சாவு: எதிர் காலத்தில் இழப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை! வரதராஜன் வலியுறுத்தல்
செவ்வாய், 29 ஏப்ரல் 2008 (17:28 IST)
தடுப்பூசி போடப்பட்ட 6 குழந்தைகள் இறந்ததற்கான காரணத்தை ஆய்வு செய்து, எதிர் காலத்தில் இத்தகைய இழப்பு ஏற்படாமல் இருக்க உத்திரவாதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என்.வரதராஜன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் என்.வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டபோது திருவள்ளூரில் 4 குழந்தைகளும், திண்டுக்கல்லில் ஒரு குழந்தையும், தர்மபுரியில் ஒரு குழந்தையும் இறந்துவிட்டன. மேலும், சில குழந்தைகள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிர்காக்கும் நோய் தடுப்பு மருந்தே உயிரைப்பறிக்கும் கொடூரம் அனைவரையும் உலுக்கியது. குழந்தைகளை பறிகொடுத்த குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறது.
தடுப்பூசி போடப்பட்ட 6 குழந்தைகள் இறந்ததற்கான காரணத்தை ஆய்வு செய்து, எதிர் காலத்தில் இத்தகைய இழப்பு ஏற்படாமல் இருக்க உத்திரவாதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய - மாநில அரசுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்துகிறது என்று கூறியுள்ளார்.