''தமிழகத்தில் மின் தடை இனி நிச்சயம் இருக்காது'' என்று மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து, மின்வாரியத்துறை அறிக்கை ஒன்றில் 800 மெகாவாட் வரை மின் பற்றாக்குறை இருக்கிறது. ஆனால் அமைச்சர் ஆற்காடு வீராசாமி மின்பற்றாக்குறையே இல்லை என்று கூறுகிறார். இதில் உண்மை நிலை என்ன? என்று கேட்டார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஆற்காடு வீராசாமி, தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை இல்லை என்று நான் எப்போதும் சொல்லவில்லை. இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் காற்று வீசாததால் மின்பற்றாக்குறை ஏற்பட்டு அதனை சமாளிக்க பிற மாநிலங்களிலிருந்து 600 மெகாவாட் வரை மின்சாரத்தை வாங்கி விநியோகம் செய்து வருகிறோம் என்று தான் கூறினேன்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் நல்ல மழை பெய்ததால் விவசாயிகள் பம்ப் செட்டுகளை இயக்கவில்லை. இதன் காரணமாக 1000 மெகாவாட் வரை மின்சாரத் தேவை குறைந்தது. நேற்று எதிர்பாராத விதமாக காற்றாலைகள் மூலம் 1200 மெகாவாட் மின்சாரம் கிடைத்துள்ளது.
நேற்றிரவு முதல் இப்போது வரை தொடர்ந்து காற்று வீசி வருவதால் மின் பற்றாக்குறை இல்லை. தமிழ்நாட்டில் எங்கும் மின் தடையும் ஏற்படவில்லை. இனிமேல் தொடர்ந்து காற்று வீசும் என்பதால், மின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை. அப்படி ஏற்பட்டாலும் அருகில் உள்ள மாநிலங்களிலிருந்து மின்சாரத்தை பெற்று விநியோகிப்போம். எனவே மின்தடை இனி நிச்சயம் இருக்காது என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.